| மனிதத்தை தொலைத்த பொறுப்பாளிகள் | ![]() | ![]() | ![]() |
| மனிதம் |
| Tuesday, 03 February 2009 18:16 |
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நிகழ்ந்துள்ள ஆறு வயதேயான ஒரு சம்பவம். ஒரு சிறுமி 280 ரூபாய் பணத்தை திருடிவிட்டதாக குற்றச்சாட்டு எழ, விசாரிக்காமல் அந்த சிறுமியை காவல்துறையினர் அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த கொடூரமான சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து பதைபதைத்த நெஞ்சங்களின் துடிப்பு வேகம் அடங்குவதற்கு முன்பாக அதே போன்றதொரு சம்பவம் தென்னிந்தியாவிலும் அரங்கேறியிருக்கிறது. ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் யுகேஜp படிக்கும் ஒரு சிறுவன், சக மாணவன் வைத்திருந்த 100 ரூபாயை திருடி விட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த சிறுவனின் ஆசிரியை மெழுகுவர்த்தியை ஏற்றி அதிலிருந்து உருகி வழியும் கொதிக்கும் மெழுகை அந்த சிறுவனின் தொடையில் ஊற்றியிருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று பழைய பாடல் வரிகள் உண்டு. இந்த எண்ணம் முரட்டுத்தனமான கான்பூர் காவல்துறையினருக்கும், காட்டுமிராண்டித்தனம் கொண்ட பள்ளி ஆசிரியைக்கும் தெரியாமல் போனது ஏனோ? அந்த இரண்டு குழந்தைகளும் குற்றம்சாட்டப்பட்டது போலவே பணத்தை திருடினார்களா? இல்லையா என்பது அல்ல பிரச்சனை. அந்த இரண்டு பிஞ்சுகளும் பணத்தை திருடியிருந்தால் அவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் விதம் இதுவா? கான்பூர் காவல்துறை முரடர்கள் மற்றும் ஆந்திராவின் காட்டுமிராண்டி ஆசிரியை ஆகியோரது செயல்கள் அந்த பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் செயல்களை அல்லவா செய்திருக்கிறார்கள். தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால் அவர்களை திருத்துவதற்கு அடிதடியோ, தண்டனையோ ஒரு போதும் உதவாது. இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்கள் மனத்தில் ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்தும். பிற்காலத்தில் அவர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் துணிச்சலையும் கொடுத்துவிடும். இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஓரளவு ஆறுதலை அளிப்பதாக உள்ளது. சிறுமியை அடித்த கான்பூர் காவல்துறை அதிகாரிகள் இருவர் நீக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியிடம் சென்று மன்னிப்பு கோருமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மாநில காவல்துறை துலைவர் உத்தரவிட்டுள்ளார். கொதிக்கும் மெழுகை சிறுவன் தொடையில் ஊற்றிய ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கைகள் மட்டுமே போதுமானதல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க பொறுப்பில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. |
| Last Updated on Tuesday, 03 February 2009 21:09 |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |