Nigazhvugal

Saturday
May 18th
கழகக் கலகமும் கருணாநிதி காட்டமும்!PDFPrintE-mail
Tuesday, 16 June 2009 22:38

சென்னை : தி.மு.க. கட்சிக்குள் கலகம் ஏற்பட்டிருப்பதை, அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) பகிரங்கமாகவே கட்சியினரிடையே கூறியுள்ளார். இது அக்கட்சியினரிடையே கூட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றக் கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடந்தது.

அதில் காட்டமாக பேசிய கட்சித் தலைவர் கருணாநிதி, "இந்த வெற்றியை பெற்றோம் என்று சொல்கிற நேரத்தில் இந்த வெற்றியையாவது பெற்றோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். நாம் எதிர்பார்த்த சில இடங்களில் நினைத்த வெற்றி நமக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு காரணம் உண்டு. நமது தோழர்கள் இடத்திலே ஆங்காங்கு ஏற்பட்ட சிறு சிறு பிரச்னைகளும் கூட நாம் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறாமல் போனதற்கு காரணமாகிவிட்டது.

நான் எல்லா இடங்களையும் சொல்லவில்லை. சில இடங்களில் நம்முடைய தோழர்கள், பொறுப்பிலே உள்ளவர்கள் இந்தத் தேர்தலில் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அவர்களுக்கு எல்லாம் இந்த நேரத்தில் என்ன தண்டனை அளிப்பது என்று எனக்குத் தெரியும். ஏதோ கருணாநிதி பேசிவிட்டு போய்விடுவார். என்னத்தை கிழிக்கப் போகிறார் என்று எண்ணியிருப்பவர்களுக்கு சொல்கிறேன்.

தவறு செய்தவர்கள் யார் யார்? அலட்சியாமாக இருந்தவர்கள் யார் யார்? இவர்கள் எல்லாம் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால் நாம் நமது வெற்றியை பிரகாசமாக காண முடியாது. யார் யார் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது. ஏனென்றால் அவரா இப்படி செய்தார் என்ற செய்தி என் நெஞ்சை எரியவிட்டுக் கொண்டிருக்கிறது.

கட்சிக்கு துரோகம் செய்தால் அவன் கட்சிக்காரனே அல்ல. அவர்கள் யார் என்பதை இந்தத் தேர்தல் புரியவைத்துள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்பு கழகத்தில் களையெடுக்கப்பட்டுதான் அடுத்த தேர்தலைச் சந்திப்போம். இதற்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும். என்ன இப்படி பேசுகிறாரே என்று யாராவது நினைத்தால், அவர்களையும் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு பதில் சொல்லும்," என்றார் கருணாநிதி.

இதன் மூலம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 12 இடங்களில் தி.மு.க. தோல்வியடைவதற்கு, அக்கட்சியில் உள்ள முக்கியப் புள்ளிகளே முனைப்புடன் செயல்பட்டிருப்பது தெரியவருகிறது.

அந்தப் புள்ளிகளைச் சாடி, கருணாநிதி கடுமையாக பேசியுள்ளாதால், அவர்கள் அடுத்தத் தேர்தலுக்குக்குள் கழகத்தில் மேலும் கலகம் ஏற்படுத்தக் கூடும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |