Nigazhvugal

Sunday
May 19th
தேசிய விருதுகள் : தென்னிந்தியா ஆதிக்கம்! PDFPrintE-mail
Monday, 07 September 2009 21:21

புதுடெல்லி: பாலிவுட் தான் இந்திய சினிமா என்ற மாயை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து இந்தி சினிமா உலகம் ஈடுபடுத்தி வந்தாலும், தரமான படைப்புகள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்தே வருகிறது என்பதற்கு மீண்டும் ஓர் உதாரணம் தான் 2007-08-ம் ஆண்டுகான தேசிய விருதுகள்.

55-வது தேசிய விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட முக்கிய விருதுகளை தென்னிந்திய சினிமாவே கைப்பற்றியிருக்கிறது.

2007-ன் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை தமிழில் வெளிவந்த 'காஞ்சிவரம்' படம் தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரகாஷ் ராஜ் வென்றுள்ளார்.

சிறந்த நடிகர் பிரிவில் 'தாரே ஜமீன் பர்' படத்துக்காக அமீர் கான் அல்லது 'சக் தே இந்தியா' படத்துக்காக ஷாரூக் கான் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாலிவுட் நம்பிய இருந்த நிலையில், 'காஞ்சிவரம்' படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கவனத்துக்குரியது.

பிரகாஷ் ராஜூக்கு இது மூன்றாவது தேசிய விருதாகும். முன்னதாக, 'தயா' படத்துக்காக சிறப்பு ஜூரி விருது மற்றும் 'இருவர்' படத்துக்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதையும் அவர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கிரிஷ் காசரவள்ளி இயக்கிய 'குலாபி டாக்கீஸ்' என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு உமாஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை, மலையாள இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் பெறுகிறார். நந்திதா தாஸ், காவ்யா மாதவன் உள்ளிட்டோர் நடித்த மலையாள திரைப்படமான 'நாலு பெண்ணுகள்' (நான்கு பெண்கள்) படத்துக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை, அடூர் கோபாலகிருஷ்ணன் பெறுவது, இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர் கானின் 'தாரே ஜமீன் பர்', குடும்ப நலனுக்கான பிரிவிலும், ஷாரூக்கான் நடித்த 'சக் தே இந்தியா' திரைப்படம், சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பாலிவுட் நடிகர் அனில் கபூர் தயாரித்த 'காந்தி மை ஃபாதர்' என்ற இந்தித் திரைப்படத்துக்கு மூன்று பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதை, சிறந்த உறுதுணை நடிகர் (தர்ஷன் ஸரிவாலா) மற்றும் சிறந்த படத்துக்கான சிறப்பு ஜூரி விருது ஆகிய மூன்று முக்கிய விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.

பாவ்னா தல்வார் முதல் முறையாக இயக்கிய 'தர்ம்' என்ற திரைப்படம், தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறப்பு விருதைப் பெற்றது.

தாரே ஜமீன் பர் படத்தில் வரும் 'மேரி மா' பாடலுக்காக பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. சிறந்த பாடலுக்கான விருதையும் அப்பாடல் தட்டிச் சென்றுள்ளது. அப்பாடலை இயற்றியவர், பிரசூன் ஜோஷி.

சிறந்த அனிமேஷன் படம் 'இனிமே நாங்கதான்'

தமிழில் வெளிவந்த 'இனிமே நாங்கதான்' என்ற படம், சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இதனை எஸ், வெங்கி பாபு இயக்கியுள்ளார்.

'சிவாஜி'க்கு விருது!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்துக்கு, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்டுக்கான விருது வழங்கப்படுகிறது.

சிறந்த தமிழ் படம் 'பெரியார்'

மாநில மொழி திரைப்படங்களுக்கான பிரிவில், சிறந்த தமிழ் திரைப்படமாக 'பெரியார்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெரியாரின் வரலாற்றைக் கூறும் இப்படத்தில்,  சத்யராஜ் நடித்திருந்தார். படத்தை இயக்கியவர் ஞான ராஜசேகரன்.

2007-08-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகான போட்டியில், 102 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. விருதுகளைத் தேர்ந்தெடுக்க சாய் பரன்ஞ்பே தலைமையில் அஷோக் விஸ்வநாத் மற்றும் நமிதா கோகலே உள்ளிட்டோர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமையே தேசிய விருதுகள் அறிவிக்கப்படவிருந்தது, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவு காரணமாக, விருது அறிவிப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Last Updated on Monday, 07 September 2009 21:33
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |