| இந்தியாவில் நிமோனியாவுக்கு ஆண்டுக்கு 4 லட்ச குழந்தைகள் மரணம் | ![]() | ![]() | ![]() |
| Tuesday, 27 October 2009 08:45 |
உலக அளவில் ஆண்டுதோறும் நிமோனியா பாதிப்பால் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. உரிய முறையில் முன்னெச்சரிக்கையாக இருப்பதாலும், தவறாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் இந்த உயிர்ப் பலியை தவிர்க்க முடியும் என்பது உலக அளவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் நம்பிக்கை. நிமோனியா மரணத்தைத் தவிர்ப்பதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி, முதல் முறையாக 'உலக நிமோனியா தினம்' அனுசரிக்கப்படுகிறது. இதற்னான செயல்பாடுகளில் இந்திய குழந்தைகள் மருத்துவ மையம், இந்திய பொது நல அறக்கட்டளை, உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் சிறார்களுக்கான நிதியம், எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், "இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றன; ஒரு மணி நேரத்துக்கு 45 குழந்தைகள் உயிரிழக்கின்றன; ஒவ்வொரு ஆண்டும் நிமோனியா காய்ச்சலுக்கு 4 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன; இந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பில் முதல் இடத்தில் இருப்பது நிமோனியா நோயே," என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் நிமோனியாவில் ஏற்படும் உயிரிழப்பில், சுமார் 25 சதவீதம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்திய குழந்தைகள் மருத்துவ கல்வி மையத்தின் தலைவர் மருத்துவர் பன்னா சவுத்ரி அளித்த பேட்டியில், "இந்திய மக்களிடையே நிமோனியா குறித்த விழிப்பு உணர்வு மிகக் குறைவாக இருக்கிறது. இந்நோயைத் தடுப்பதற்கு அரசும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொது நல பிரச்னையாக கருதி நிமோனியாவை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பலியாவதைத் தடுக்க முடியும் என்று நம்புகிறோம்," என்றார் மருத்துவர் பன்னா சவுத்ரி பொதுவாக குழந்தைகளை அதிகம் தாக்கும் நிமோனியா காய்ச்சலானது ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவோம். அதேநேரத்தில், போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமை, பிறக்கும் போதே எடை குறைவு, அதிக நெருக்கடியான பகுதிகளில் வாழ்வது, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை அறியாமை போன்ற காரணங்களினாலும் நிமோனியா காய்ச்சல் ஏற்படுகிறது. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |