| இந்தியா-அமெரிக்கா இடையே முதலீட்டு ஒப்பந்தத்திற்கு பேச்சு வார்த்தை - பிரணாப் | ![]() | ![]() | ![]() |
| வணிகம் |
| Monday, 08 November 2010 20:27 |
வளமான முன்னேற்றத்திற்கு நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுவதாகவும், எந்தவொரு உலக அளவிலான பிரச்சனைக்கும் கூட்டு அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும் நிதியமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்க தொழில் அதிபர்களிடையே புது தில்லியில் இன்று அமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது : உலகத்தின் ஒருபாதி பிரச்சனையைத் தீர்ப்பதில் நமக்குள்ள அவசரம் உலகத்தின் இதரப் பகுதிகளில் அதிக பிரச்சனைகளை உருவாக்குவதாக அமையக் கூடாது. உலக அளவில் முதலீடுகள் செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா உருவாகியுள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பு துறையில் மட்டும் பதினோராவது ஐந்தாண்டு காலத்தில் 514 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன. 12-வது ஐந்தாண்டு காலத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இத்துறையில் முதலீடுகள் அவசியமாகும். முதலீடுகளின் அளவு கணிசமாக உயரும் போது அதற்கு நிதியுதவி பெறுவதற்கு புதுமையான வழிமுறைகள் தேவைப்படுகின்றன. இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவுகளைப் பொறுத்தவரை பொருளாதாரக் கொள்கை, நிதி மற்றும் வர்த்தகத்தில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய உறவு இருந்து வருகிறது. இந்தியாவின் முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் இறக்குமதியில் அமெரிக்கா முக்கிய நாடாக திகழ்ந்து வருகிறது. இந்திய-அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டமைப்பின் பரிந்துரைகளை பரிசீலிக்க திட்டக் குழு துணைத் தலைவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்த தற்போது பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் திரு பிரணாப் முகர்ஜி கூறினார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா தரப்பில் அந்நாட்டு கருவூல செயலாளர் திரு திமோதி கைத்தனர், வர்த்தகச் செயலாளர் திரு காரி லாக்கி, வேளாண் செயலாளர் திரு தாமஸ் வில்சாக் ஆகியோரும் இந்தியா சார்பில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு ஆனந்த் சர்மா, திட்டக் குழு துணைத் தலைவர் திரு மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதுதவிர இந்தியா மற்றும் அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் அதிபர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |