Nigazhvugal

Saturday
May 18th
பரபரப்பாகிறது ஸ்பெக்ட்ரம் விவகாரம்: டெல்லியில் தீவிர ஆலோசனைPDFPrintE-mail
தேசியம்
Sunday, 14 November 2010 21:50

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர், சோனியா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் இன்று (நவ.14) அவசர ஆலோசனை நடத்தினர். தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ராசா இரண்டாவது நாளாக இன்றும் சந்தித்து பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை முறைகேடாக விற்றதன் மூலம் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாவும் பிரதமர், சட்டத்துறை அமைச்சர், நிதியமைச்சரை மீறி அவர் செயல்பட்டுள்ளார் என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பல லட்சம் கோடி முறைகேடு செய்த அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஒரு சில நாட்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது அரசியல் செயலர் அகமது படேல், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் ராசா நேற்று (நவ.13) இரவு சென்னை வந்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, பதவி விலக தேவையில்லை என்றே அப்போதும் ராசா பேட்டியளித்தார். பின்னர் முதல்வர் கருணாநிதியை சென்று சந்தித்தார். இன்று (நவ.14) காலை மீண்டும் தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

இதற்கிடையில், தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் இன்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றுள்ளார். முல்லை பெரியாறு அணை வழக்கில் தமிழகம் சார்பில் ஆஜராகும் வக்கீலுடன் ஆலோசனை நடத்த சென்றிருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறினாலும், ராசா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் பேசுவதற்காகவே சென்றிருக்கிறார் என்று தெரிகிறது.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |