Nigazhvugal

Tuesday
May 21st
ராசா விளக்கம் தரட்டும்; பிரதமர் அளிக்க அவசியம் இல்லை: பிரணாப் முகர்ஜிPDFPrintE-mail
தேசியம்
Monday, 15 November 2010 20:44

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அவையில் விளக்கம் அளிக்க ராசாவுக்கு உரிமை இருக்கிறது. பிரதமர் விளக்கம் அளிக்க அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் மத்திய அரசுக்கு தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார் வலுத்ததைத் தொடர்ந்து பதவியை அவர் நேற்று இரவு (நவ.14) ராஜினாமா செய்தார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று கோரியும் பா.ஜ., சிவசேனா, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் மூன்றாவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவையிலும் இப்பிரச்னைகளால் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கு நடுவே அமளி காரணமாக நாடாளுமன்றத்தில் கேள்விநேரம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பொது கணக்குக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். அதில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். எனவே, கூட்டுக்குழு விசாரணை கோருவது அர்த்தமற்றது என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க ராசாவுக்கு உரிமை இருக்கிறது. அவர் அறிக்கை அளிக்க விரும்பினால் தாராளமாக அளிக்கலாம். இந்த விஷயத்தில் பிரதமர் எதற்காக அறிக்கை அளிக்க வேண்டும்? தெகல்கா ஊழல் வெளியானபோது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தார். பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிக்கை அளிக்கவில்லையே. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானது என்றார்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |