Nigazhvugal

Tuesday
May 21st
ஆரோக்கியமும் யோகாசனமும்!PDFPrintE-mail
Monday, 29 December 2008 22:59

மருத்துவமனைப் பக்கம் பெரும்பாலும் போகாமலும், மருந்துகளை நாடாமலும் நலமுடன் வாழ்வதற்கு மிகச் சிறந்த வழிதான் யோகா பயிற்சி.

நம்முடைய வாழ்க்கை முறையை சீர்படுத்தினாலே நோய்கள் நம்மை அண்டாமல் செய்துவிட முடியும். அத்தகையை நல்ல வாழ்க்கை முறையில் யோகா ஓர் அங்கமாகவே இருத்தல் வேண்டும். 

இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு. 

பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்.

அவசரகால வாழ்க்கையின் இடையே நமக்கேற்ற உடற்பயிற்சி முறைகளை அறிவதில் பலரும் திண்டாடுகிறோம். அத்தகையோருக்கு எளிதான வழியே யோகப் பயிற்சி.

எந்த வயதினருக்கும், எப்போதும் செய்ய முடிகின்ற யோகாசனம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

யோகாசனத்தை தினமும் காலையில் 5-ல் இருந்து 8 மணிக்குள் செய்வதுதான் சிறந்தது. காலை நேரம் கிடைக்காவிட்டால், மாலை 4-ல் இருந்து 8 மணிக்குள் செய்வது நன்மை பயக்கும்.

சுத்தக் காற்று தாராளமாக கிடைக்கின்ற அறையில்தான் யோகா செய்ய வேண்டும். நின்று கொண்டு செய்கின்ற ஆசனங்களை வெற்றுத் தரைகளிலும் செய்யலாம். ஆனால், உட்கார்ந்தும் படுத்தும் செய்ய வேண்டியனவற்றுக்கு பாய் உபயோகப்படுத்தலாம். மாறாக, கட்டிலைப் பயன்படுத்தக்கூடாது.

காலைக்கடன்களை முடித்தப் பின்பு, கை - கால் முகங்களை கழுவிவிட்டு யோகாசனங்கள் செய்யத் தொடங்கலாம். வெறும் வயிற்றில்தான் யோகாப் பயிற்சி செய்ய வேண்டும். யோகாப் பயிற்சிக்குப் பிறகு ஐந்து நிமிடம் எதுவும் செய்யாமல் மல்லாந்து கிடந்து தேகத்துக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பின்னர், வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கலாம். ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் யோகாசனம் செய்யும்போது, உரிய ஆசிரியர்களின் அறிவுரைகளப் பெற்று செய்ய வேண்டும்.

உணவில் கட்டுப்பாடு!

எல்லா நாட்களும் யோகாசனத்தைச் செய்வது மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்துவதே ஆரோக்கியத்துக்கு நன்மை.

சைவ உணவை உட்கொள்வதே சாலச் சிறந்தது என்று யோகா சாஸ்திரங்கள் அறிவுறுத்துகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டியது அவசியம்.

மருத்துவப் பலன்கள்!

நம்மை பாடாய்படுத்தும் பல நோய்களுக்கு யோகாசனத்தால் நல்ல பலன் கிடைக்கிறது. வாயுத்தொல்லை, ஜீரணி சக்தி குறைவு, மலச்சிக்கல், உடல் பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், வாதம், இதய நோய் போன்ற பல வியாதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர யோகாசனம் மிகச் சிறந்த மருந்தாகும்.

மனநலனுக்கு...

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனம் செய்யக்கூடாது என்றில்லை; அவர்கள் யோகா ஆசிரியருடைய மேற்பார்வையுடன் செய்யலாம். நோயாவாய்ப்பட்டிருக்கும்போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தாமல், மிதமான அளவில் யோகாசனம் செய்வதே சிறந்தது.

ஒவ்வொரு நோய்க்கும் பல ரீதியான ஆசனங்கள் செய்யலாம். ஆனால், இதில் எதைச் செய்வது என்று குழப்பமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆசனம் எது? அவற்றை எவ்வளவு நேரம் செய்வது என்பதை புரிந்துகொள்வதற்கு யோகா ஆசிரியரின் வழிநடத்தல் தேவை.

பதற்றம் நிறைந்த வாழ்க்கையில் யோகாசனத்தால் மனதிற்கு நிறையவே அமைதி நிச்சயமாக நமக்குக் கிடைக்கின்றது.

காலையில் யோகாசனம் செய்யும்போது மனதிற்கும் உடம்பிற்கும் கிடைக்கின்ற உற்சாகம், நம்முடைய அன்றாட வேலைகளை நன்றாகச் செய்ய வழிவகுக்கும்.

எனவே, சிறந்த யோகா பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளுடன் யோகப் பயிற்சியினை அன்றாடம் மேற்கொண்டு இனிய ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுவோம்.

Last Updated on Tuesday, 30 December 2008 01:00
 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |