| தாரே ஜமீன் பர்... ஆஸ்கார் கனவு கலைந்தது! | ![]() | ![]() | ![]() |
| Wednesday, 14 January 2009 18:26 |
டிஸ்லெக்சியா குறைபாடுள்ள 8 வயது சிறுவனைப் பற்றிய இந்த அற்புதப் படைப்பு, வெளிநாட்டு மொழி படப்பிரிவின் இறுதிச் சுற்றில் முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால், 81-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தாரே ஜமீன் பர் நிச்சயம் விருதைத் தட்டி வரும் என்ற கனவு கலைந்து போனது! சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம்தான், 'தாரே ஜமீன் பர்'. தரமான படம் என்ற விமர்சனங்களுடன் வர்த்தக ரீதியிலும் வெற்றி பெற்றது. நடிகர் அமீர்கான் 'தாரே ஜமீன் பர்' இந்திய சினிமாவின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்று என்பதில் சற்றும் மிகையில்லை. இந்திய இலக்கியங்களில் குழந்தை இலக்கியத்துக்கு எப்படி ஒரு பஞ்சம் இருக்கிறதோ... அதேபோல் குழந்தைகளின் அனைத்து பக்க உலகத்தையும் காட்டும் உன்னத சினிமா படைப்புகளும் குறைவு. இத்தகைய சூழலில் உருவானதே, 'தாரே ஜமீன் பர்'! இது உண்மையில் படமல்ல... கற்றல் குறைபாடுள்ள (டிஸ்லெக்ஸியா) குழந்தைகளை இந்தச் சமூகம் எப்படி அணுக வேண்டும் என்பதை, உணர்வுப்பூர்வமான திரைக்கதையின் வாயிலாகச் சொல்லப்பட்ட பாடம்! ஆண்டுதோறும் ஹாலிவுட் படங்களுக்காக வழங்கப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், வெளிநாட்டு மொழி பிரிவிலும் ஒரு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் வெளிநாட்டு மொழி பிரிவில், இந்தியா சார்பில் பங்கேற்க 'தாரே ஜமீன் பர்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள திரைப்படத்தை தேர்வு செய்யக்கூடிய திரைப்பட சம்மேள குழு இந்த படத்தை தேர்வு செய்தது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலான சினிமா ரசிகர்கள் பலரையும் வெகுவாக வசீகரித்ததுடன், அனைவரையும் நெகிழவைத்தது தாரே ஜமீன் பர். இப்படத்துக்கு நிச்சயம் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளிநாட்டு மொழி பிரிவின் இறுதிச் சுற்றில் இப்படைப்பு தேர்ந்தெடுக்கப்படாமல் போயுள்ளது, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்துள்ளது! "தரையில் நட்சத்திரங்கள்..." இது தான் தாரே ஜமீன் பரின் அர்த்தம்... நட்சத்திரங்கள் ஜொலிக்க விருது ஒரு பொருட்டல்ல..! |
| Last Updated on Wednesday, 14 January 2009 18:40 |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |