தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து வாக்கு கேட்க பயப்படுவதாக மயிலாடுதுறையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், திமுகவின் 8 மாத ஆட்சிமீது மக்களுக்கு கோபம் அதிகமாக உள்ளது. எந்த ஒரு விஷயத்தை எடுத்து பார்த்தாலும் திமுக அரசு மக்கள் நலனை சாராத ஒரு அரசாக உள்ளது.
517 தேர்தல் வாக்குறுதிகளை அளித்த திமுக 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கை பார்க்கும்போது திமுக அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. காவல்துறையினரை சரியாக செயல்பட விடவில்லை. இந்த ஆட்சியில் எந்த ரேஷன் கடைகளிலும் எந்த ஒரு பொருளும் தரமாக வழங்கப்படவில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு படம் என்பதுபோல் மக்கள் நலனை சாராத அரசாக திமுக உள்ளதற்கு உதாரணம் பொங்கல் பரிசு தொகுப்பில் நடைபெற்ற ஊழல்.
தரமற்ற பொருட்களை வழங்கி மக்கள் விரோதத்தை பெற்றுள்ளது. தமிழக மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட உள்ளனர். தமிழக முதல்வர் ஏன் மக்களை சந்தித்து ஓட்டுகேட்கவில்லை. வெளியே வந்து எந்த மக்களையும் பார்த்து, தேர்தல் பிரச்சாரத்தை செய்யாத முதல்வராக மாறியிருக்கிறார். வெளியே வந்து மக்களை சந்திக்க, சகோதர, சகோதரிகளை சந்திக்க பயம்.
இதையும் படிங்க: கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி.. நகைகள் எப்போது கிடைக்கும்: அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி தகவல்
பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் தருவதாக கூறியது எங்கே? நகை கடன் தள்ளுபடி எங்கே? 73 சதவீத பெண்களுக்கு நகைகடன் தள்ளுபடி இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார். இந்த காரணங்களுக்காத்தான் வெளியில் வந்து பிரச்சாரம் செய்யாமல் காணொலி மூலம் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார். நகராட்சி, பேரூராட்சிக்கு வரும் நிதியில் 85 சதவீத நிதி மத்திய அரசு கொடுக்கின்ற நிதி.
அனைத்து மத்திய அரசு திட்டங்களும் உள்ளாட்சி மூலமாக தான் மக்களுக்கு வந்தடைகிறது. உங்களுடைய வாக்கு பாஜவுக்கு அளித்தால் எந்த ஊழல் இல்லாமல் நேரடியாக உங்களுக்கு வந்தடையும் என்றார். மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததன் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறியுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் திமுக எதிர்க்கிறது.
மேலும் படிக்க: வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது
2006-2011 திமுக ஆட்சியில் இருந்தபோது 14 தனியார் மருத்துவக்கல்லூரிக்கு வாய்ப்பு கொடுத்தது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பதிலாக அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டுமென்றால் பிரதமர் மோடி தமிழகத்தில் ஒரே நாளில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார். ஆயிரத்து 650 சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களுக்கு பயன்படக்கூடிய மத்திய அரசின் கொள்கை முடிவை தமிழக முதல்வர் தொடர்ந்து எதிர்த்துப் பேசுகிறார் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: கிருஷ்ணகுமார் – மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.