இரண்டு கைகளையும் இழந்த தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் பி.வெங்கடேசன் என்பவர் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து தனக்கு விலக்கு அளித்து ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மூக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும் வெங்கடேசன் என்பவர் இரு கைகளை இழந்தாலும் ஆசிரியராகவும், நீச்சல் வீரராகவும் பல சாதனைகளை படைத்து வருகிறார். தருமபுரி மாவட்டம், எம்.ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பெருமாள், இவரது மகன் வெங்கடேசன், 5ஆம் வகுப்பு படிக்கும் போது விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது மின் ஒயிலில் தவறுதலாக கைகளை வைத்ததில் இரு கைகளும் கருகியது. பின்னர் இரு கைகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆசிரியர் வெங்கடேசன், 10 வயது வரை இரு கைகளுடன் இருந்த போது எப்படி உற்சாகமாக இருந்தாரோ! அதே உற்சாகத்துடன் ஊனத்தை பற்றி கவலைபடாமல் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
கால்கள் மூலம் எழுதவும்,புத்தகங்களை புரட்டவும்,உணவு அருந்துவதும் பழகிகொண்ட வெங்கடேசன் இரு கைகளையும் இழந்த போதும் அவருக்குள் உள்ள தன்னம்பிக்கையோடு வாழ்க்கையோடு வாழ்ந்து வருகிறார். தருமபுரியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு சென்னையில் தனியார் கல்லூரியில் பி.எட்,எம்,எட்., படித்து முடித்தவர், விளையாட்டிலும் மற்றவர்களை போல் சாதனை படைத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இதையும் படியுங்கள் : இரவோடு இரவாக ரகசியமாய் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – கண்டு கொள்ளாத அதிகாரிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி, மஹாராஷ்ரா மாநில பாராஒலிம்பிக் சங்கமும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான போட்டிகள் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற வெங்கடேசன் ஃப்ரீ ஸ்ட்ராக், பேக் ஸ்ட்ராக், பட்டர்ஃப்ளை என அனைத்து பிரிவுகளிலும் நான்கு பதக்கங்களை வென்று இந்திய தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.
இதே போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த நீச்சல் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்க பதக்கம், வெள்ளி பதக்கம் என பல பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளார் . சமீபத்தில் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற 7-வது மாநில பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் வெங்கடேசன் 100 மீட்டர் பிரெஸ்ட்ரோக் நீச்சல் போட்டி, 50 மீட்டர் நீச்சல் போட்டி, 100 மீட்டர் இலவச உடை நீச்சல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இதையும் படியுங்கள் : பெண்களுக்கு இலவச பயணம் சரி.. ஆண்களுக்கு எங்கே? – சம உரிமை கேட்டு இந்து தேசிய கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
இரு கைகளும் இல்லாமல் பல்வேறு சாதனைகள் செய்து தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த வெங்கடேசனுக்கு தமிழக அரசு அவரது செந்த ஊரின் அருகே மூக்கனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. அங்கு கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இரு கைகள் மூலம் செய்ய வேண்டிய வேலைகள், இரு கால்களை கொண்டும் செய்து வருகிறார். மேலும் சைக்கிள் ஹேண்ட்பாரில் உடலை வைத்து தினமும் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சாலைகளிலும் சைக்கிளை ஒட்டி செல்கிறார். மாணவர்கள் எழுதும் பாடங்களையும், தேர்வு தாளையும் வாயில் பேனாவை வைத்து திருத்தியும் கையெழுத்து போடுகின்றார்.
வெங்கடேசனுடன் பணியாற்றுவதை பெருமையாக கருதுவதாக சக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியராகவும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாகவும் திகழுகிறார் ஆசிரியர் வெங்கடேசன். இவரை போன்ற மாற்றுத்திறனாளிகள் வீட்டில் முடங்கி விடாமல், தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியில் வெற்றி பெற முடியும் என்ற வார்த்தைக்கு உதாரணமாக சமூகத்தை பார்த்து எழுந்து நிற்கிறார்.
தற்போது அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் பி.வெங்கடேசன், தற்காலிக ஆசிரியராக பணியில் இருக்கும் தனக்கு தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளித்து ஆசிரியர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர் : ஆர்.சுகுமாா், தருமபுரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: