கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி. இதனால் உலகம் முழுவதும் மெஸ்ஸி கொண்டாடப்பட்டார். இதில் ‘கோல்டன் பால்’ விருதையும், கடந்த வாரம் நடைபெற்ற ‘FIFA’ விருது விழாவில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் வென்றிருந்தார் மெஸ்ஸி.

மெஸ்ஸியின் சொந்த ஊரான அர்ஜெண்டினாவின் ரொசாரியோ (ரோசாரியோ) பகுதியில் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெல்லா ரோகுசோவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சூப்பர் மார்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென அந்த சூப்பர் மார்கெட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 குண்டுகள் சூப்பர் மார்க்கெட்டின் கண்ணாடிகளைத் துளைத்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபர் மெஸ்ஸிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் துண்டுச் சீட்டு ஒன்றை அங்கு தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார். அதில், “மெஸ்ஸி நாங்கள் உனக்காகக் காத்திருக்கிறோம். ஜாவ்கின் (ரோசாரியோ பகுதியின் மேயர்) ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர். அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்பவேண்டாம்” என்று எழுதியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.