புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான சானியா மிர்சா தற்போது டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார்.

டென்னிஸில் சானியா புரிந்த சாதனைகள் ஏராளம். பல்லாண்டு கால உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலன்கள் அவை.

ஆறு வயதில் இருந்தே டென்னிஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர் சானியா மிர்சா. அவரது ஆரம்பகால பயிற்சியாளர் அவரது அப்பா இம்ரான் மிர்சாதான். பள்ளிப்பருவத்தில் சானியா வகுப்பில் இருந்த நேரத்தை விட மைதானத்தில் இருந்த நேரம் தான் அதிகம்.

பதின்ம டென்னிஸ் போட்டிகளில் விளையாட துவங்கிய அவர் 2002 இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று முதல் முறையாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார்.

2005 இல் தனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம், WTA ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆனார்.

2009 இல் ‘ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர்’ பட்டம் மற்றும் 2012 இல் ‘பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர்’ பட்டம் என மகேஷ் பூபதியுடன் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளார் சானியா.

இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு புரூனோ சோரஸுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

2015-இல் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸுடன் விம்பிள்டனில் வென்ற இவர், பின்னர் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆட்டங்களிலும் வென்றுள்ளார்.

ஒற்றையர், இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலக அளவில் சாதித்த சானியா மிர்சா ஓட்டு மொத்தமாக 6 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்று சாதனைப் புரிந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற டூட்டி ப்ரீ டென்னிஸ் போட்டியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சானியா மிர்சா, பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆலோசகராக தனது புதிய கரியரை தொடங்கியுள்ளார்.

பல விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் தாண்டி ஒரு பெண்ணாக இந்தியாவில் இருந்து உச்சம் தொட்ட சானியாவுக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.