ஐ.பி.எல் போட்டிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கென்றும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸை எடுத்துக் கொண்டோமானால், தொடக்க சீசன்களில் சுமாராக ஆடி, அதன்பிறகு ரோஹித் தலைமையில் வெறித்தனமாக ஆடத் தொடங்கி பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர்கள். சென்னையை எடுத்துக் கொண்டோமானால் ஆரம்பத்திலேயே சீராக ஆடக்கூடியவர்கள். பெரும்பாலும் ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிபெற்றுவிடுவார்கள். அவர்களும் பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். பெரும் வீழ்ச்சிகளைச் சந்தித்து அவர்களிடமிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். மும்பை – சென்னை என நினைத்த மாத்திரத்தில் நமக்கு இந்தக் கதைகள்தான் ஞாபகம் வரும்.
அதேநேரத்தில் பெங்களூர் என யோசித்தால், `எல்லா வல்ல வீரர்கள் இருந்தும் நினைத்ததைச் சாதிக்க முடியாமல் தொடர்ந்து சொதப்பும் அணி’ என்பது மட்டுமே மனதில் வரும். பெங்களூருவைப் பொறுத்தவரை இது ஐ.பி.எல்-க்கு மட்டமான கதையாடல் அல்ல போல. வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடரிலும் பெங்களூர் செயல்பாடு அணியின், அப்படியே ஐ.பி.எல் போன்றுதான் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

ஓர் அறிமுக தொடரை ஓர் அணி எப்படியெல்லாம் தொடங்க விரும்பாதோ அப்படியெல்லாம் தொடங்கியிருக்கிறது பெங்களூர் அணி. வுமன்ஸ் பிரீமியர் லீகின் முதல் 3 போட்டிகளிலும் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆண்கள் அணியைப் போலவே அத்தனை நட்சத்திரங்களும் இந்த அணியும் ஜொலிக்கத் தவறியிருக்கிறது.
இதுவரை நடந்தது என்ன?
குஜராத் ஜெயண்டசூக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி முதலில் பந்து வீசியிருந்தது. குஜராத் அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்திருந்தது. சேஸ் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 190 ரன்களை எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முதல் போட்டியில் பெங்களூர் அணி டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொண்டது. அந்தப் போட்டியிலும் 200+ சேசிங்கையே பெங்களூர் செய்ய வேண்டியிருந்தது. அதில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இமாலயத் தோல்வி! இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்ட போது பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. மும்பை அணி 14.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியது. ஒப்பீட்டளவில் இந்த மூன்று தோல்விகளில் நேற்றைய தோல்விதான் சிறிய தோல்வி. அந்தவகையில் பெங்களூர் அணி நேற்றைய செயல்பாட்டில் திருப்தி அடையலாம். மற்றபடி மூன்று போட்டிகளையும் சேர்த்து வைத்து பார்த்தோமெனில் பேட்டிங் பௌலிங் இரண்டிலுமே மிக மோசமான பெர்ஃபார்மென்ஸையே பெங்களூர் அணி கொடுத்திருக்கிறது.

மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் பவர்ப்ளேயில் ஒரு 8 பந்துகளுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை பெங்களூர் அணி இழந்தது. டாப் 4 பேட்டர்கள் அத்தனை பேரும் காலி. இந்தப் போட்டிக்கான டாஸில்தான், “டாப் 4 பேட்டர்களில் யாராவது ஒருவராவது 16-17வது ஓவர்வரை நின்று ஆட வேண்டும். அதுதான் எங்களின் திட்டம்” என கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசியிருந்தார். பேசிய அவரே அந்த 4 விக்கெட்டுகளுள் ஒன்றாக வீழ்ந்ததுதான் வேதனை.
டெல்லிக்கு எதிரான 200+ சேஸிங்கின் போது ஒரு 50+ பார்ட்னர்ஷிப்பை கூட பெங்களூர் பேட்டர்கள் உருவாக்கவில்லை. குஜராத்துக்கு எதிரான போட்டியிலுமே டிவைன், எல்லிஸ் பெர்ரி, ஹெதர் நைட் எனப் பலரும் போராடியிருந்தாலும் யாராலும் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க முடியவில்லை.
பந்துவீச்சு பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘முழுமையாகச் சொதப்புவதுதான் எங்களின் இலக்கு’ என்பதாக மட்டுமே இதுவரை செயல்பட்டிருக்கிறார்கள். ஆடிய 3 போட்டியில் 2 போட்டியில் எதிரணியை 200 ரன்களைக் கடக்க வைத்துள்ளனர். ஒரு போட்டியில் 6 ஓவர்கள் மீதம் வைத்து எதிரணியை வெல்ல வைத்திருக்கிறார்கள்.
மூன்று போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 54.1 ஓவர் வீசி 583 ரன்களை வாரி வழங்கியிருக்கிறார்கள். எக்கானமி ரேட் 10.7! எந்த ஒரு அணியின் பந்துவீச்சு கூட்டணியும் இத்தனை மோசமான எக்கானமியைக் கொண்டிருக்கவில்லை.

ஏதாவது ஒரு பௌலராவது 8க்கு கீழ் எக்கானமி வைத்து ஒரு ஸ்பெல்லையாவது சிறப்பாக வீசியிருக்கிறார்களா எனத் தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாகவே பெங்களூர் அணி அத்தனை விதத்திலும் சொதப்பியிருக்கிறது. நட்சத்திர வீராங்கனைகள், வலுவான பயிற்சியாளர் கூட்டணி, செட்டிலான அணி என அத்தனையும் இருந்தும் இப்படிச் சொதப்புவதுதான் ஆண்கள் ஆர்சிபி அணியை ஞாபகப்படுத்துவதாக இருக்கிறது.
வுமன்ஸ் பிரீமியர் லீகில் ஒவ்வொரு அணியும் 8 போட்டிகளில் ஆட வேண்டும். ஆக, பெங்களூர் அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமிருக்கின்றன. இந்த அடுத்தச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பும் பெங்களூவிற்கு இருக்கிறது. ஆனால், குஜராத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் பேச்சு அத்தனை அயர்ச்சிமிகுந்ததாக இருந்தது. தோல்விகளிலிருந்து பாடத்தை மட்டும் கற்றுக்கொண்டு புது உத்வேகத்தோடு ஆர்சிபி களமிறங்க வேண்டும். செய்வார்களா?