வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. ஒவ்வொரு அணியும் 8 லீக் போட்டிகளில் ஆட வேண்டும். அந்த வகையில் பெங்களூர் அணி தனது நான்காவது போட்டியில் நேற்று உபி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் பெற்றிருக்கும் தோல்வி மூலம், பெங்களூர் அணி இந்த வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரின் முதல் பாதி முழுவதையும் தோல்வியுடனே முடித்துள்ளது.
நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து, 138 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்திருந்தார். சோஃபி டிவைன் கொஞ்சம் நின்று ஆடியிருந்தார். இவர்கள் தவிர பெங்களூர் சார்பில் எந்த பேட்டருமே உருப்படியாக ஆடவில்லை. டார்கெட்டை சேஸ் செய்த உபி அணி 13 ஓவர்களிலேயே சேஸ் செய்து முடித்தது. ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி 47 பந்துகளில் 96 ரன்களை எடுத்து அசரடித்திருந்தார். உடன் ஓப்பனராக இறங்கிய தேவிகாவை பொறுமையாக செட்டில் ஆக வைத்து முழுப்பொறுப்பையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டு சிறப்பாக ஆடியிருந்தார் அலிஸா ஹீலி. அதற்காக ‘ப்ளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
கலவையில் வழிகாட்டி #PlayBold #நம்மஆர்சிபி #அவள் போல்ட் #WPL2023 #GGvRCBpic.twitter.com/c89nb5W78e
– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (@RCBTweets) மார்ச் 8, 2023
இங்கு உபி வாரியர்ஸின் வெற்றியை விட பெங்களூர் அணியின் தோல்வியைப் பற்றித்தான் அதிகம் பேச வேண்டும். உபி வாரியர்ஸ் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் வெற்றிகரமாக சேஸ் செய்யும் ஒரு பிட்சில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கிறது. அதேமாதிரிதான் பந்துவீச்சுக்கும். உபி பௌலர்களால் ஓர் அணியை முழுமையாக ஆல் அவுட் செய்ய முடிந்த அதே பிட்சில்தான் பெங்களூர் பௌலர்களால் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியவில்லை. பெங்களூர் அணி 10 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகள் ரன் அவுட் மூலம் வந்திருந்தன. ஆக, 8 விக்கெட்டுகளை உபி பவுலர்கள் வீழ்த்தியிருந்தனர். அந்த 8 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்களே வீழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எக்கல்ஸ்டன், தீப்தி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் பட்டையைக் கிளப்பியிருந்தனர். ஆனால், இன்னொரு பக்கம் பெங்களூர் அணியின் ஸ்பின்னர்களோ ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. ஸ்ரேயாங்கா பாட்டீல், எரின் பர்ன்ஸ், சஹானா பவார், ஹெதர் நைட் என பெங்களூர் அணியின் ஸ்பின்னர்களின் எக்கானமி ரேட்டே 10 க்கு மேல் இருந்தது.
போட்டிக்குப் பிறகான பேட்டியில் ‘கிளஸ்டர் ஆஃப் விக்கெட்’ என ஸ்மிருதி மந்தனா ஒரு விஷயத்தைப் பேசியிருந்தார். ஒரு கேப்டனாக, ஸ்மிருதி சரியான விஷயத்திற்கே கவனம் கொடுத்திருக்கிறார். டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு 7 ரன்களை சேர்ப்பதற்கு பெங்களூர் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. மும்பைக்கு எதிரான அடுத்த போட்டியில் பவர்ப்ளேயில் ஒரு 8 பந்துகளுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்தது. உபி வாரியர்சூக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஒரு 5 பந்துகளுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். இப்படியாக கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழப்பதால் அந்த வீழ்ச்சியிலிருந்து மீளவே முடியாமல் அப்படியே சறுக்கலை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிடுகிறது பெங்களூர் அணி. மேலும் 7-15 இந்த மிடில் ஓவர்களில் ஓவருக்கு 7-8 ரன்களை எடுப்பதுதான் எங்களின் திட்டமாக இருந்தது என WV ராமனிடம் ஸ்மிருதி மந்தனா கூறியிருந்தார்.

ஓவருக்கு 7-8 ரன்கள் என்றால் ஓடி ஓடியே கூட எடுத்து விட முடியாது. அப்படியிருக்கும் சூழலில் அந்த 7-15 ஓவர்களிலுமே பெங்களூர் அணி அதிக விக்கெட்டுகளை இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த 4 போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகளை இந்த 7-15 மிடில் ஓவரிலேயே பெங்களூர் அணி இழந்துள்ளது. பெங்களூர் அணியைத் தவிர வேறெந்த அணியைக் குறிப்பிட்டாலும் அந்த அணிக்காக வீராங்கனை ஒருவர் ஆடிய முக்கியமான இன்னிங்ஸ் அப்படியே கண் முன் வந்துவிடும். மும்பைக்காக ஹர்மன்ப்ரீத் முதல் போட்டியில் ஆடிய இன்னிங்ஸ், டெல்லிக்காக மெக் லெனிங் அடித்த அந்த அரைசதங்கள், நேற்று உபிக்காக அலிசா ஹீலி ஆடிய அந்த அதிரடி இன்னிங்ஸ் என ஒவ்வொரு அணியிலும் வீராங்கனைகள் தடம்பதிக்கும் வகையிலான இன்னிங்ஸ்களை நிறையவே ஆடத் தொடங்கிவிட்டனர். ஆனால், பெங்களூர் அணியில் அப்படி ஒரு இன்னிங்ஸை நம்மால் கூற முடியாது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஆடியிருக்கும் 4 போட்டிகளில் மொத்தமாகவே 10 விக்கெட்டுகளைத்தான் பெங்களூர் அணியின் பௌலர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இந்த 10 விக்கெட்டுகளிலுமே 8 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள்தான் வீழ்த்தியிருக்கிறார்கள். மிதவேக பந்துவீச்சாளர்கள் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்கள். பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அழுத்தமே ஏற்படுத்துவதில்லை.

பேட்டிங்கில் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கி அதை அப்படியே மிடில் ஆர்டருக்கு கடத்தி அங்கிருந்து போட்டியை நன்றாக இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் ஒரு இயல்பான வடிவமைப்பையே பெங்களூர் அணியின் பேட்டிங் செய்யவில்லை. பந்துவீச்சிலும் அதேதான். பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். மிடில் ஓவரில் பார்ட்னர்ஷிப் பில்ட் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெத் ஓவரில் ரன்களை இழுத்துப் பிடிக்க வேண்டும். இந்த மாதிரியான எந்த வடிவமைப்புக்குள்ளுமே சிக்காமல் சிதைவுண்டு போய் இருக்கிறது பெங்களூர் அணியின் லைன் அப்.
வரைபடங்களை வைத்து தத்துவமாக ஒரு விஷயத்தை குறிப்பிடுவார்கள். ஒரு கிராஃப் உயரத்தை நோக்கி செல்கிறதெனில் அது மேல் நோக்கியே சென்று கொண்டிருக்க முடியாது. ஏதோ ஒரு தருணத்தில் அது சரிவைச் சந்தித்தே ஆக வேண்டும். அதேமாதிரிதான் கிடைமட்டத்தில் இருக்கும் கிராஃப் லைன் எப்போதும் அதிலேயே இருந்துவிடாது. உயர்ந்துதான் ஆகும். அது சீக்கிரமே நடந்துவிட்டால் ஆர்சிபிக்கு நல்லது!