செய்திப்பிரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19 மார்ச், 2023 06:44 AM

வெளியிடப்பட்டது: 19 மார்ச் 2023 06:44 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19 மார்ச் 2023 06:44 AM

சர்வதேச அளவில் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்று புக்கர். இந்த விருதின் 54 ஆண்டுகால வரலாற்றில், ஒரு தமிழ் நூல் அதன் தொடக்கப் பட்டியலில்கூட இடம் பெற்றதில்லை. முதல் முறையாக இதன் நெடும் பட்டியலில் 13 நூல்களில் ஒன்றாக பெருமாள்முருகனின் ‘பூக்குழி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (‘Pyre’) நூல் இடம்பிடித்துள்ளது. அனிருத்தன் வாசுதேவன் இதை மொழிபெயர்த்துள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்த புஷ்கின் பிரஸ், பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’, ‘பூக்குழி’ ஆகிய நாவல்களுக்கான பிரிட்டன் (UK) உரிமையைக் காலச்சுவடு பதிப்பகத்திடமிருந்து பெற்றது. இந்த விருது பிரிட்டன் பதிப்பு நூல்களுக்கு மட்டுமானது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு இந்த விருது, கீதாஞ்சலி🎍 எழுதிய ‘ரீத் சமாதி’ இந்தி நாவலின் மொழிபெயர்ப்புக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்திய மொழி நூல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான்

எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022ஆம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் அமைப்பு மூலம் 1991ஆம் ஆண்டிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2019இல் வெளியான சிவசங்கரியின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பான ‘சூரிய வம்சம்’ நூலுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்ட இது, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்று. தமிழில் இந்த விருது ‘இராமானுஜர்’ நாடகத்துக்காக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கும் (1999), ‘ராமகாதையும் ராமாயணங்களும்’ ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்புக்காக அறிஞர் அ.அ.மணவாளனுக்கும் (2011) அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் புத்தகக் காட்சி

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து ஆவடி பேருந்து நிலையம் அருகே கனரக வாகனத் தொழிற்சாலை மைதானத்தில் திருவள்ளூர் மாவட்டப் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகின்றனர். மார்ச், 17ஆம் தேதி தொடங்கி இப்புத்தகக் காட்சி மார்ச் 27 வரை 11 நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்து தமிழ் திசை (அரங்கு எண்: 43) பதிப்பகமும் கலந்துகொண்டுள்ளது.

தவறவிடாதீர்!

Source link