”அரச விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் சீமான்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசார் பதிவு செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரி வழக்கில் சீமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் அரசு தரப்பில் (குற்ற எண் : 237/18) சீமான் மீது பதியப்பட்ட அந்த வழக்கில், திருச்சி விமானநிலையத்தில் கலகம் செய்யும் நோக்கத்துடன் கூடியது (147 பிரிவு), கூட்டத்திற்குள் மரணத்தை உண்டாக்கும் வகையிலான ஆயுதங்களை வைத்திருந்தது (148 பிரிவு), கூட்டத்தில் ஒருவர் செய்த குற்றத்திற்குக் கூட்டத்தினர் அனைவரும் பொறுப்பேற்றனர். (பிரிவு 149), பொது ஊழியர்களை தாக்குவது மற்றும் பணி செய்யவிடாமல் தடுத்தது (பிரிவு 353), பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு தரப்பினர் மோதிக்கொள்வது (160 பிரிவு), பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது 3 இன் TNPPDL சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இன்று நீதிபதி பாபு கேட்ட கேள்விக்கு, குற்றச்சாட்டுகளை மறுப்பதாக சிமான் பதிலளித்தார். வழக்கின் சாட்சி விசாரணை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் திருச்சி நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சிமான், “கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் நான் இல்லை. விமான நிலையத்திற்குள் இருந்து என் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் திருச்சியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது அத்தகைய வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதுதான் திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலை.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு நான்கு பேர் சிறப்பு முகாம் என்கிற கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். அதற்காக காவல்துறையினரின் தடையை மீறி திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.
பா.ஜ.க வை வீழ்த்துவதற்கான மாற்று அணி நாடு முழுவதும் உருவாக வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என கூட்டணி கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் அறிவிக்கப்பட்டதால், அந்த அணி சிதறுண்டு போனது. அப்படி ஒரு நிலை வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்டு விடக்கூடாது.
ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா? அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது? அதை படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது” என்று கூறினார்.