2024-ல் பா.ஜ.க-வை நிச்சயம் தோற்கடிக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் நினைக்கின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்கான வேலையில் இறங்கவில்லை. மாறாக மம்தா, கே.சி.ஆர், கெஜ்ரிவால் ஆகியோர் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்று கூறிக்கொண்டே காங்கிரஸையும் எதிர்க்கின்றனர்.

மோடி, அமித் ஷா

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, “காந்தியவாதிகள், அம்பேத்கர் கொள்கைவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சிகள் சித்தாந்த ரீதியாக ஒன்றுபடாவிட்டால் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாது” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், முன்பு எப்போதும் இல்லாத எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பா.ஜ.க தற்போது உருவாக்கியதாக கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தி – சசி தரூர்

ராகுல் காந்தியின் மீதான நடவடிக்கை குறித்து ஊடகத்திடம் பேசிய சசி தரூர், “ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் என்பது, பா.ஜ.க தங்களுக்கெதிராக தாங்களே போட்டுக்கொண்ட `கோல்’. இது பா.ஜ.க-வுக்கு சில எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம், ஒட்டுமொத்த உலகத்துக்கே இந்தியாவின் ஜனநாயகத்தை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது. ராகுல் காந்திக்கு என்ன நடந்தது, அனைத்து தலைநகரங்களிலும் தலைப்புச் செய்திகளாக உள்ளன.

பாஜக

மேலும், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை தற்போது அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். தங்களது மாநிலங்களில், காங்கிரஸை வலுவாக எதிர்க்கும் பிராந்திய கட்சிகள் கூட, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்திக்கு ஆதரவாக வந்துள்ளனர்.” என்று கூறினார்.

மேலும் இந்த வழக்கு மற்றும் தகுதி நீக்கம் தொடர்பாகப் பேசுகையில், “முதலில் இந்த வழக்கில் தடை கோரியவரே, மீண்டும் வந்து தடை கோரியதைத் திரும்பப் பெறுகிறார். அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வருகிறது.

எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கம்

அதுமட்டுமல்லாமல், தகுதி நீக்கம் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், குடியரசுத் தலைவர் அலுவலகத்துடன் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல், தகுதி நீக்கம் அறிவிப்பில் மக்களவைச் செயலகம் கையொப்பமிடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.Source link