காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கறுப்பு உடையில் தமிழக சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கு. செல்வபெருந்தகை கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை, “சட்டமன்றத்துக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிய வேண்டும். ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம்.

ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேச வேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல் இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று காலை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு உடையில் சட்டமன்றத்துக்கு வருகை தந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

கருப்பு உடையில் வானதி சீனிவாசன் - விஜயதாரணி

கருப்பு உடையில் வானதி சீனிவாசன் – விஜயதாரணி

அந்த நேரத்தில் சட்டமன்றத்துக்கு சிறிது தாமதமாக வந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எதேச்சையாக கருப்பு நிற உடையில் வந்திருந்தார். அவர் உள்ளே வரும் போது எதிர்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி, வானதி சீனிவாசனிடம், “என்ன நீங்களும் கறுப்பு உடையா…” என விளையாட்டாக பேச…. “அய்யயோ….இல்லைங்க எதேச்சையாக கருப்பு உடையில் வந்துவிட்டேன்” என சிரித்துக் கொண்டே அவர்களை கடந்திருக்கிறார். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் கலகலப்பு ஏற்பட்டது. வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்களும் வானதியிடம் கறுப்பு உடைப்பு குறித்து கேள்விகளை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அதனை சிரித்தபடியே கடந்து சென்றார்.



Source link