அரியலூரில் பரிசு பொருள் பார்சல் வந்ததாக கூறி ரூ.12 லட்சம் இணைய மோசடி செய்தவர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கடகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது அம்மா ஜெயந்தியின் போனுக்கு வாட்ஸ் அப்பில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலத்தில் பேசிய பெண் தன்னுடைய மகள் பிறந்தநாளை முன்னிட்டு உங்களுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாக ஜெயந்தியிடம் ஆங்கிலத்தில் கூறியுள்ளனர். மேலும் அது தற்போது விமான நிலையத்தில் உள்ளது எனவும், அதனை பெற Gst கட்ட முதலில் 35 ஆயிரம் ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

படம்

இதையடுத்து கல்லூரி மாணவனான விமல்ராஜ், 35 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார். பின்னர் 1 லட்சம், 2 லட்சம் என கொஞ்சம் கொஞ்சமாக சிறுக சிறுக 12 லட்சம் ரூபாய் மோசடி.

விமல்ராஜ் தந்தை செல்வராஜிக்கு தொண்டை புற்றுநோய் உள்ளதால் சிகிச்சைக்காக பரிசு தொகை 33 லட்சமும், பரிசுப் பொருட்களும் கிடைக்கும் என நம்பி அக்கம், பக்கத்து வீட்டினரிடம் கடன் வாங்கி கொடுத்துள்ளார் ஜெயந்தி. ஒருகட்டத்தில் பரிசுத்தொகையும், பரிசுப்பொருட்களும் வராமல்போகவே, தான் ஏமாந்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்து விமல் ராஜ் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம்

இதுகுறித்து ஜெயந்தி கூறியது, ”வெளிநாட்டிலிருந்து கொரியர் வந்திருக்குன்னு சொல்லி மெசேஜ் போட்டாங்க. முதல்ல ஒரு 35 ஆயிரம் அனுப்புங்கன்னு சொன்னாங்க. அப்படியே படிப்படியா 12லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினோம். எல்லாம் கிடைக்கும்னு நம்பிக்கையில அக்கம்பக்கத்துல கடன்வாங்கித்தான் கொடுத்தோம்” என்கிறார் கண்ணீருடன்.

ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link