காதுகள் மூடி இருக்கும் விநோத பிரச்னை! அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் 4 வயது சிறுவன்!

சென்னை அருகே திருவேற்காட்டில் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுவன், ஏழ்மையின் காரணமாகவும், சிகிச்சை பெற முடியாமலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் சிறுவனின் பெற்றோர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதி, நடேசன் நகரில் வசித்து வருபவர்கள் தினேஷ்-தீபிகா தம்பதியினர். இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 7 வயது மகளும், கவின் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இதில் 4 வயது சிறுவனான கவினே இந்த அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். மகன் கவின் பிறந்தபோது அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த தினேஷ் தம்பதியினர். பிறக்கும்போதே குழந்தையின் இரு காதுகளும் மூடியநிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பிரச்சனை அறிதினும், அறிதான ஒன்று என்று கூறிய மருத்துவர்கள், இதற்கு சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளனர்.

படம்

காதுகள் மூடிய நிலையில் இருப்பினும் கவின் வளர வளர, மற்ற குழந்தையை போல இயல்பாகவே இருந்துள்ளான். ஆனால் மூடிய காதுகளால் கேட்கும் திறன் மட்டும் மிகவும் குறைவாக உள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கூலிவேலை செய்யும் தினேஷ், அறியவகை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் கவினுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

படம்

நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டோடிய நிலையில், தற்போது கவினுக்கு 4 வயதாகிறது. அதாவது பள்ளிக்கு செல்லும் வயது தொடங்கிவிட்டது. ஆனால், காதுகள் மூடிய நிலையில் பிறந்த கவினை மற்ற மாணவர்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு எழ, மற்ற குழந்தையை போல கவினை மாற்ற வேண்டும் என்றும், அவனுக்கு ஏற்பட்டுள்ள கேட்கும் திறன் குறைபாட்டை போக்க வேண்டும் என்றும், பல மருத்துவமனைகளை பெற்றோர் நாடியுள்ளனர். ஆனால், சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மருத்துவமனைகள், அதற்குச் செலவாகும் தொகையைக் கூறும் போது தான் சிக்கல் எழுந்துள்ளது. இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை செய்ய 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க, அதிர்ந்து போய் இருக்கிறார்கள் கவிஞரின் பெற்றோர்கள்.

படம்

எவ்வளவு முயற்சி செய்தும் மருத்துவர்கள் கேட்கும் தொகையை புறக்கணிக்க முடியாமல் தவித்து வரும் கவினின் தந்தை தினேஷ் தற்போது தமிழக அரசின் உதவியை நாடியுள்ளார். மற்ற குழந்தையை போல தங்களின் மகன் கவினும், கேட்கும் திறணை பெற அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தங்கள் மகனின் படிப்பு, எதிர்காலமும் முதலமைச்சரின் கையில் இருப்பதாகவும், அரசு உடனடியாக தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COMSource link