அணியின் அயல்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் ஸ்லாட்டை மார்க் உட் நிரப்புகிறார். மணிக்கு 150+ கீலோமீட்டர் வேகத்தை எட்டும் அவரது பந்துகள் பயமுறுத்தக் கூடியவையே என்றாலும் அதனை விடவும் அச்சம் கொள்ளக்கூடியது காயத்திற்கும் அவருக்குமான டிராக் ரெக்கார்ட். கடந்த சீசனிலேயே லக்னோவிற்காக ஆடவேண்டிய அவர் காயத்தினால் ஆடமுடியாமல் போக ஆண்ட்ரூ டை அவரிடத்தை நிரப்பினார். இம்முறை நவீன் உல் ஹக்கையும் லக்னோ கைவசம் வைத்துள்ளது. எனினும் மார்க் உட் நடுவில் விலக நேர்ந்தால் அதன் விளைவு பெரும்பாதிப்பாக விடியும்.

கடந்த சீசனில் மோசின் கான் 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பௌலிங்கில் பரிமளித்தார். 5.97 எக்கானமியோடு எதிரணியைத் திணறடித்தார். குறிப்பாக மிடில் மற்றும் டெத் ஓவர்களில் லக்னோவின் கை இவர்களால் ஓங்கியது. இந்திய அணிக்குள்ளேயே எட்டிப் பார்த்திருக்க வேண்டியவரை காயம் கட்டிப்போட்டது. இன்னும் அவர் முழுமையாக மீளவில்லை. தொடர் முழுவதும் ஆடுவது சந்தேகமே என்பது அணிக்குப் பெரும் இழப்பே! மற்றொரு அணியின் வேகப்பந்துவீச்சு வீச்சாளரான அவேஷ் கான் கடந்த சீசனில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன் கசிவைக் கட்டுப்படுத்தத் தவறினார்.

இவை எல்லாவற்றாலும் வேகப்பந்து வீச்சில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்றே மினி ஏலத்தில் உனத்கட், ரொமாரியோ, சாம்ஸ் ஆகியோரை லக்னோ எடுத்தது. இருப்பினும் பூரணுக்கு அள்ளிக் கொடுத்ததை ஒரு சர்வதேச தரமுள்ள வேகப்பந்துவீச்சு வீச்சாளர்களுக்குக் கிள்ளியாவது கொடுத்திருந்தால் அவர் மார்க் உடுக்கு நவீன் உல் ஹக்கை விடவும் சிறந்த இணைவீரராக இருந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருப்பார்.

சென்றமுறை பிளேயிங் லெவனில் மட்டுமல்ல பேட்டிங் பொசிஷன்களிலும் அடிக்கடி மாற்றங்களைச் செய்வது அவர்களுக்குப் பாதிப்பானது. அதனை இம்முறை சரிசெய்ய முற்பட வேண்டும்.

ஆக, அங்கொன்றும் இங்கொன்றுமாக பலங்களே பயங்கொள்ளும் அளவிலான ஒருசில பலவீனங்களால் லக்னோ அணி இம்முறை நெய்யப்பட்டிருக்கிறது. அழுத்தித்தள்ளும் இந்த எல்லா பின்னடைவுகளையும் கேப்டன் ராகுல் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் சுவாரஸ்யமே.Source link