சென்னை புரசைவாக்கம் அபிராமி திரையரங்கு பின்புறத்திலிருந்து ஓட்டேரி வரதம்மாள் தோட்டம் வரையுள்ள 400 கிரவுண்டு காலி இடம் தற்போது “டிரஸ்ட் ஆஃப் தமிழ்நாடு” அறக்கட்டளையின் கீழ் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்த பின் 1947 ஆம் ஆண்டு இந்த 400 கிரவுண்டு இடத்தை கந்தசாமி நாயுடு, ஏழை மாணவர்களின் படிப்புக்காக வாங்கியுள்ளார். முழுக்க முழுக்க மாணவர்களின் படிப்புக்காக மட்டுமே வாங்கப்பட்ட இந்த இடமானது தனக்குப் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என உயில் எழுதி வைத்துவிட்டு பிறகு “டிரஸ்ட் ஆஃப் மெட்ராஸ்” என்ற பெயரில் இந்த நிலங்களை நிர்வகித்து வருகிறார்.

கந்தசாமி நாயுடு மறைவிற்குப் பிறகு அவரது மனைவி செல்லம்மாள் 400 கிரவுண்ட் இடத்தை லீசுக்கு எடுத்து நிர்வகித்து வந்துள்ளார். பின் அவரது மறைவிற்குப் பிறகு அந்த இடமானது தற்போது வரை “டிரஸ்ட் ஆஃப் தமிழ்நாடு” என்ற அறக்கட்டளையின் கீழ் உயர் நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் சென்னை, கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த ரெஜிலா ஸ்ரீ(40) என்ற பெண் வழக்கறிஞர், வரதம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள 44 கிரவுண்ட் இடத்தை, தனது பாட்டி மாரியம்மாள் சொத்துக்களைப் பிரிக்கும்போது தனக்கு எழுதி வைத்ததாகவும், அதை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி வழக்குத் தொடரப்பட்டது. தொடர்ந்து தனக்கு சாதகமான உத்தரவையும் பெற்றுள்ளார்.

இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து வருவாய்த்துறையில் தனது பெயரை மாற்றி பதிவு செய்ய முயற்சித்த போது, ​​கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட நீதிபதி தலைமையில் நிர்வகிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் அட்மினிஸ்ட்ரேட்டர் ஜெனரல் மற்றும் அபிஸியல் அசைனி ராஜு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ, தனது பாட்டி மாரியம்மாள் 2006 ஆம் ஆண்டு எழுதி வைத்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், வழக்கறிஞரான ரெஜிலா ஸ்ரீ அதனை சாதகமாக கொண்டு, அதைப் பூர்வீக சொத்து எனக்கூறி ஆக்கிரமிப்பில் உள்ள நபர்கள் மீது தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ, அவரது பாட்டி மாரியம்மாள் மற்றும் சித்தி நாகரத்தினம் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் ரெஜிலா ஸ்ரீ, சித்தி நாகரத்தினம் இறந்த காரணத்தினால், வயதான பாட்டி மாரியம்மாளிடம் விசாரணை நடத்தி தற்போது வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை, உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து மத்தியக்குற்றப்பிரிவு – நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link