அகில இந்தியச் சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு நேற்று மாலை டெல்லியில் நடந்தது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்து, கலந்துகொண்டன. இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “அரசியல் நடவடிக்கைகளை விடச் சமூகநீதி நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொண்டுள்ளதால்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தில் இணைத்துள்ளோம்.

அகில இந்தியச் சமூக நீதி மாநாடு

சமூகநீதிதான், நம்மை எல்லாம் இணைத்துள்ளது. சமூகநீதியைக் காக்கும் கடமை, முக்கியமாக நமக்குத்தான் இருக்கிறது. சமூகநீதியை அடைய வேண்டும் என்பது இந்தியச் சமூக அமைப்புமுறை சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்னை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி என ஒரே மாதிரியான பிரச்னைதான் இருக்கிறது. இவற்றை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி. பாம்பின் விஷத்தை நீக்க விஷமுறிவாக அந்த விஷமே பயன்படுவதைப் போல, சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை உயர்த்திய சாதி ரீதியான இட ஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக் கருத்தியல் பயன்படுகிறது.

ஆனால், இதை யார் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் வெற்றியும் பலனும் மாறுபடலாம். அரசியலமைப்புச் சட்டத்தில் ‘சமூகரீதியாக – கல்விரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவது’தான் சமூகநீதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது’ என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) முதல் திருத்தம்.

அகில இந்தியச் சமூக நீதி மாநாடு

இந்த சட்டத் திருத்தத்துக்குக் காரணமான தலைவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும். அதனால்தான் சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். ஆனால், இதில் வஞ்சகமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, பொருளாதார ரீதியாக என்பதைச் சேர்த்துவிட்டது. ஏழை – பணக்காரன் என்ற சூழல் மாறிக்கொண்டே இருக்கும். பணம் இருபதையேகூட ஒருவர் மறைக்க முடியும். எனவே பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு என்ற அளவுகோல் சரியான அளவுகோலல்ல. சமூகநீதியுமல்ல.

ஏழைகளுக்காகச் செய்ய வேண்டிய பொருளாதார உதவியை நாம் தடுக்கவில்லை. ஆனால் அது பொருளாதார நீதியாகுமே தவிர, சமூகநீதியாகாது. அதேபோல ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகளும் தானே இருக்க முடியுமா? அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளைப் புறக்கணிப்பதே சமூக நீதி அல்லவா? அதனால்தான் பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் எதிர்க்கிறோம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரைச் சொல்லி வந்த சிலர் இந்த இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

அகில இந்தியச் சமூக நீதி மாநாடு

இந்த வன்மமான எண்ணத்துக்கு அதிகம் விளக்கம் சொல்லத் தேவையில்லை. 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தருவதால் தகுதி போகதா? திறமை போகதா? 100 ஆண்டுகளுக்கு முன்னால் உயர்சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது. அதனை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும். சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கர்நாடக மாநில இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவர்களை உயர்சாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்துள்ளனர். இஸ்லாமியர்களிடம் இருந்து பறித்த இட ஒதுக்கீட்டை வேறு இரண்டு சமூகத்துக்குப் பிரித்துக் கொடுத்து இஸ்லாமியர்களுக்கும் அந்தச் சமூகத்துக்கும் மோதலை உருவாக்கி இருக்கிறார்கள். நடக்கவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இத்தனைச் செய்துள்ளார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்கள் – வாக்களிக்காதவர்கள் என்ற ரீதியில் இந்த பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வெளிப்படையாகவே சமூகநீதி கொலை செய்யப்பட்டுள்ளது.

அகில இந்தியச் சமூக நீதி மாநாடு – ஸ்டாலின்

எனவே, பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு, நீதித்துறையில் இட ஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்பட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்தி- அதன் தரவுகளை வெளியிட வேண்டும்.

இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தது ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தையும், சமூகநீதி ஆணையத்தையும், சமூகநீதி கண்காணிப்புக் குழுவையும் அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வழிகாட்டும். அதைச் செயல்படுத்தும்.

அகில இந்தியச் சமூக நீதி மாநாடு – ஸ்டாலின்

இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். அந்த வகையில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதனை அனைத்து மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.Source link