திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சுற்றி கருவேல மர்மங்கள் நிறைய உள்ளன. அதில் ஒரு மரத்தில் ராட்சத தேனீக்கள் கூடுகட்டி இருந்தது.

அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேன்கூடு மீது கற்களை வீசினர். இதில் கலைந்த தேனீக்கள் அவ்வழியே சென்றவர்களை விரட்டி, விரட்டி கொட்டியது.

மேலும் அதிலிருந்து தேனீக்கள் மூன்று தெருக்களில் உள்ள மக்களை துரத்தித் துரத்தி கொட்டியது. இதனால், கிராமத்தில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என பலரும் கொட்டும் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அலறியடித்து ஓடினர்.. சிலர் தீப் பந்தத்துடன் தேனீக்களை விரட்டினர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (46) ராதா (65), தேவகுமார்(65), சூர்யா (40) அன்னை மரியா (57) உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டின.

இதில் அவர்களுக்கு மயக்கம்அடையும் நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, அப்பகுதியில் உள்ள ராட்சத தேன்கூட்டை கலைத்து தேனீக்களை விரட்டினர்.

சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் துரத்தித் துரத்தி தேனீக்கள் கொட்டிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேனீக்கள் ஏன் தாக்குகிறது…?

சமீப நாட்களில் தேனீக்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.. எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது, ​​சூழல் ஆய்வாளரும் மருத்துவருமான டாக்டர் மணிவண்ணன் விளக்கமளித்தார். அவர் கூறினார்,

“முதலில் தேனீக்களை பற்றித் தெரிந்து கொண்டு அதன் பின் அதன் நன்மைகளையும், கடியையும் அறிந்து கொள்வோம். இந்த பூமிக்கு தேனீக்களின் பங்கு மிகவும் முக்கியமானது, இதை உணர்ந்த பல அறிவியலாளர்கள் தேனீக்களின் முக்கியத்துவத்தை நமக்காக பதிவு செய்து வைத்துள்ளனர்.

தேனீக்கள்

அதில் மிக முக்கியமானவர் , ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவர் ”தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்.

தேனீக்கள் இல்லை என்றால் இந்த உலகம் அழிந்துதான் போகும் இந்த உலகம் இயங்கும் பல்வேறு உயிர்களின் பங்களிப்பு அவசியம் அவற்றில் மிக முக்கியமான தேனீக்கள்.

நாம் படித்திருப்போம், ஒரு தேன் கூட்டில் “ராணி” தேனீ ஒன்றும் “ஆண் தேனீ” ஆயிரக்கணக்கிலும் “வேலைக்கார தேனீக்கள்” பல ஆயிரக்கணக்கில் இருக்கும்.

வேலைக்கார தேனீக்களின் வேலை பூக்களின் தேனை சேகரித்து தன் கூட்டத்திற்கு வழங்குவதுதான், அதற்காக அவை இயங்கிக் கொண்டே இருக்கும்.

ஒரு கிலோ தேனை சேகரிக்கும் தேனீக்கள் 10 மில்லியன் பூக்களை சந்திக்க வேண்டும். 10 மில்லியன் பூக்களை சந்தித்த தேனீக்கள் அதிலிருந்து மகரந்தத்தை தன் உடம்பில் ஒட்டிக்கொண்டு மகரந்த சேர்க்கைக்கு துணை புரிகின்றன.

இந்த அயல் மகரந்த சேர்க்கையால் காய்கறிகள், பழங்கள், விதைகள் உருவாகி இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கின்றன.

இன்று பூமியில் வாழும் பல்லுயிர்களுக்கு கிடைக்கும் உணவுகளில் 60% தேனீக்களால் ஏற்படும் அயல் மகரந்த சேர்க்கையால் மட்டுமே கிடைக்கிறது. கற்பனை செய்து பாருங்கள் தேனீக்கள் இல்லை என்றால் இந்த உலக உயிர்களுக்கு உணவே இல்லை.

தேனீ !

என்னவாகும் உலகம்..???

இப்படி இந்த உலகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கும் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனித பேராசையால் அழிந்து கொண்டிருக்கின்றன.

காலநிலை மாற்றம், மரபணு மாற்றப்பட்ட விவசாய பயிர்கள், அயல் தாவரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நகரமயமாக்கல், காடுகளை அழித்தல் போன்ற காரணங்களால் இந்த பூமியில் கொஞ்சம் கொஞ்சமாக தேனீக்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

இதே நிலை நீடித்தால் ஐன்ஸ்டினின் கூற்று உண்மையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. பெரும்பாலும் தேனீக்கள் உணவு தேடுவதிலும் கூடுகளை அமைப்பதிலும் தன் நேரத்தை செலவிடும் தன்மை கொண்டவை. தன் கூட்டுக்கும் இனத்திற்கும் தொந்தரவு ஏற்படாத வரை அது யாரையும் தாக்குவதில்லை.

நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், நிறைய வீடுகளில், விவசாய பண்ணைகளில் கூடுகளை வைத்து தேனீக்கள் வளர்ப்பதை இன்று நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தேனீ வளர்ப்பு என்பது விவசாயம் சார்ந்த துணைத் தொழிலாக இருக்கிறது. இப்போது நான் இயற்கையின் பக்கமாக நின்று இதைச் சொல்கிறேன். அடுத்து மருத்துவராக தேனீக்கடித்தால் ஏற்படும் விளைவுகள் சொல்கிறேன்.

தேனீக்கடியால் ஏற்படும் விளைவுகள்…

தேனீக்கள் கடித்த உடன் அந்த இடத்தில் சிவப்பு கலரில் வீக்கம் தோன்றும். தேனீ கொடுக்கிறது நம் உடலுக்குள் சென்று விடுவதே அதற்கு காரணம்.

இந்த கொடுக்குகள் [Bee sting] சற்று அமிலத்தன்மை வாய்ந்தவை இதை நமது உடலில் செலுத்தியவுடன் பெரும்பாலான தேனீக்கள் இறந்து விடுகின்றன.

இந்த அமிலத்தன்மை நமது உடம்பில் சிலருக்கு லேசான அறிகுறிகளுடன் நின்றுவிடும். அரிப்பு வலி போன்றவை உடனடியாக சரியாகும் வாய்ப்புகளும் உண்டு.

சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரித்து நாக்கு தொண்டை உலர்ந்து போகும் வாந்தி வரலாம், வயிற்றுப்போக்கு வெளிச்சம், மாரடைப்பு கூட நேரிடலாம். இப்படி சிலருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் உண்டாக்கலாம்.

டாக்டர் மணிவண்ணன்

யாருக்கு எது ஏற்படும் என்றால் நாம் கணிக்க இயலாது, அதே நேரத்தில் தீவிர விளைவுகளான இதயத்துடிப்பு அதிகரித்தல், வாந்தி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

பெரும்பாலும் குழந்தைகள், வயதானவர்கள், இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தேனீ கடிக்கு ஆளாகும்போது அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.

முகம் அல்லது கழுத்துப் பகுதியில் தேனீக்கள் கடித்தாலும், நிறைய தேனீக்கள் கடித்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

தேனீக்களின் கொடுக்குகளில் இருந்து அமிலத்தன்மை வெளிப்படுவதால் இன்றும் கிராமங்களில் தேனீ கடித்த இடங்களில் சுண்ணாம்பு தடவுவது, ஒரு பழக்கமாக உள்ளது இது ஓரளவுக்கு பயனளிக்கும் ஆனால் இது முழுமையான வைத்தியம் அல்ல. தேனீக்கடியில் இருந்து நம்மளை தற்காத்துக் கொள்வது இப்படி என அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

என்ன செய்ய வேண்டும்?

வீடுகளை ஒட்டி உள்ள இடங்களில், குழந்தைகள் நடமாடும் இடங்களில் தேன்கூடு கட்டு இருந்தால் அதை முறைப்படி அப்புறப்படுத்துவது நல்லது.

நகரங்களில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தால் வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றி அழகாக அவர்களே கூடுகளை அகற்றித் தருவார்கள்.

கிராம மக்களுக்கு தேன் கூடுகளை அகற்றுவது நன்றாக தெரியும் எனினும் இரவு நேரங்களில் கூடுகளை அகற்றுவது நல்லது.

தேன் கூடுகளை அகற்றும் போது வீடுகளில் ஜன்னலை கதவுகளை அடைத்து வைத்துக் கொள்வது அவசியம்.

தேனீக்கள் விரட்டும் போது வேகமாக ஓடாமல் வேகமாக நடையுடன் பக்கத்தில் உள்ள கட்டடத்திற்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை அடைத்து விடவும்.

தேனீக்கள் விரட்டும்போது நாம் துணியால் உடம்பை மூடிக் கொள்வது நல்லது.

ஆப்பிள் விளைச்சலைக் கூட்டிய தேனீக்கள்!

விரைவாக நடக்கும் போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மூக்கில் அல்லது வாயில் தேனீக்கள் புகுந்து கொண்டு மூச்சை அடக்கும் வாய்ப்பு உள்ளது.

தேனீக்கள் கடித்தவுடன் அதிக படபடப்பு மயக்கம் வாந்தி வருதல் போன்ற உணர்வுகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மருத்துவமனையில் குறைந்தது ஒரு நாளாவது தங்கி இருந்து உடனடி விளைவுகள் அடுத்தடுத்த பாதிப்புகள் ஏதும் ஏற்படுகிறதா என்பதை கண்டறிந்த பின்பு வீட்டிற்கு செல்வது நல்லது.

இன்றைய நவீன மருத்துவத்தில் இதன் விளைவுகளை எளிதாக குணப்படுத்த இயலும் எனவே வீட்டு வைத்தியம் செய்வதை விட வேண்டாம்.

தேனீக்கடி சிகிச்சையால் பல நோய்கள் குணமாவதாக வலைதள பக்கங்களில் செய்திகள் கண்டிருப்பீர்கள். இதைப்பற்றி முறையான ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த ஆராய்ச்சி முடிவுகள் வந்தால் தான் இது பலனளிக்கும் என நமக்குத் தெரியும், அதுவரை தேனீக்கடி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.Source link