நியூயார்க்: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (76) கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது டிரம்புடனான ரகசிய தொடர்பு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதை ட்ரம்ப் மறுத்தார்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ரூ.1.07 கோடியை ஸ்டார்மிக்கு கொடுத்துள்ளார். இந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் வணிக செலவை பொய்யாக காட்டுவது சட்டவிரோதம் ஆகும். எனவே, டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி (அரசுத் தரப்பு வழக்கறிஞர்) ஆல்வின் பிராக் விசாரணை நடத்தினார். மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த மார்ச் 30-ம் தேதி டிரம்ப் மீது 34 பிரிவுகளில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் முன்பு டிரம்ப் ஆஜரானார். சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணையின் போது, ​​தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். பின்னர் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு புளோரிடாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய டொனால்டு ட்ரம்ப் பற்றி:

அமெரிக்காவில் இது போன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. நான் செய்த ஒரே குற்றம் இந்த நாட்டை அழிக்க நினைத்தவர்களை எதிர்த்து அச்சமின்றி போராடியது மட்டுமே. 2024 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்காவில் குழப்பம் நிலவுகிறது. பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறி உள்ளது. சீனாவுடன் ரஷ்யா சேர்ந்துள்ளது. இதுபோல ஈரானுடன் சவுதி இணைந்துள்ளது. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளன. இதனால் 3-வது அணு ஆயுதப் போர் உருவாகும். நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தாது. ஏராளமான உக்ரைன் மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

நமது கரன்சி சரிவடைந்து வருகிறது. விரைவில் சர்வதேச தரத்தை இழந்துவிடும். அப்படி நிகழ்ந்தால் 200 ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட பெரும் தோல்வியாக அமையும். மோசமான தோல்வி வேறு எதுவும் இருக்க முடியாது. உலகின் சக்தி வாய்ந்த நாடு என்ற அந்தஸ்தை இழந்துவிடுவோம். ஜோ பைடன் நம் நாட்டை அழித்து வருகிறார். இவ்வாறு டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

பொதுவாக நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்படுவோர், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆளும் அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது. எந்த ஒரு வழக்கிலும் விசாரணை மற்றும் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுவது இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளது.

விவாதத்துக்குரிய குற்றச்சாட்டு: நடிகை ஸ்டார்மியின் வாயை அடைக்க டிரம்ப் சார்பில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தனது தேர்தல் பிரச்சார செலவாக குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் குற்றச்சாட்டு. அமெரிக்காவில் வணிக செலவில் பொய் கணக்கு எழுதுவது சட்டவிரோதம்.

அதேநேரம் ட்ரம்பின் இந்த நடவடிக்கை அந்நாட்டு சட்டப்படி தவறான நடத்தை என்ற அடிப்படையில் குற்றமாக கருதப்படும். ஆனால் இது கிரிமினல் குற்றமாகாது.

எனவே, இதை கிரிமினல் குற்றம் என்பது நிருபிக்க வேண்டுமானால், ட்ரம்புடன் தொடர்புடைய பொய் கணக்கு மட்டுமின்றி, கேள்விக்குரிய வணிகக் கணக்குகள் முழுவதையும் காட்ட வேண்டிய பொறுப்பு அட்டர்னிக்கு உள்ளது. பிரச்சார நிதி சட்டத்தை மீறியதாக ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது உறுதியான வழக்காக தெரியவில்லை.

இதுதவிர, கடந்த 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இதையடுத்து 2021 ஜனவரியில் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு உட்பட டிரம்ப் மீது தீவிரமான சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையெல்லாம் விட்டுவிட்டு நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கை தீவிரமாக விசாரிப்பது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

Source link