கிருஷ்ணகிரி: வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பதைத் தடுக்க, கிருஷ்ணகிரி அருகே ஏக்கல்நத்தம் மலைக் கிராம வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை உயர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்வேலி மற்றும் தாழ்வான உயரத்தில் செல்லும் மின் கம்பிகளில் உரசி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை உயர்த்தும், பழுதான மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி அருகே ஏக்கல்நத்தம் மலைக் கிராம வனப்பகுதியில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, கோட்ட செயற்பொறியாளர் பவுன்ராஜ், நகர உதவிச் செயற்பொறியாளர் கந்தசாமி, மேகலசின்னம்பள்ளி உதவிப் பொறியாளர் லட்சுமணன், வனத்துறை வனவர் சம்பத்குமார், வனப்பகுதியில் காப்பாளர் செந்தில் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தாழ்வாகச் சென்ற மின்கம்பிகளின் உயரத்தை உயர்த்தி அமைத்தனர். மேலும், பழுதான மின்கம்பங்களை அகற்றி, புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டன.
தற்போது வனத்துறை மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பாதுகாக்க: மின் விபத்துக்களிலிருந்து அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருட்டுத் தனமாக மின்வேலிகள் அமைப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, சட்ட விரோத மின்வேலி அமைப்பைத் தடுக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.