அஸ்ஸாம் மாநிலம், தேமாஜி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான கார்டோங்க் என்பவர் சிறு வயது முதற்கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். `ஒரு காலத்தில் வாழ்வாதாரத்தின் முக்கியப் பயிராக இருந்த நெல் சாகுபடி, வெள்ளப் பெருக்கு காரணமாக, இப்போது முதலீட்டுக்கு ஏற்றதாக இல்லை. வெள்ளம் வடிந்த பிறகு தேங்கியிருக்கும் மணல் பரப்பு விவசாய நிலத்தைப் பாழடிக்கிறது’ என ஆதங்கப்படுகிறார். இருப்பினும் குறுகியகால மாற்றுப் பயிராக உருளையும், பட்டாணியும் பயிரிடுவதால், 4-5 மாதங்களில் ரூ. 80,000/-க்கும் கூடுதலான வருமானம் கிடைக்கிறது’ என்கிறார்.

விவசாயம் இங்குள்ள மக்களின் ஜீவாதாரம். இருப்பினும் விவசாய நடைமுறைகள் இப்போது கணிசமான அளவில் பரவலான மாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றன. மேலே சொன்னது சிறு உததாரணம்தான். வெள்ளங்கள் இப்பகுதியில் மிகச் சாதாரணமாக இருந்தாலும் 2022 அக்டோபரில் ஏற்பட்ட பெரு வெள்ளம் அஸ்ஸாம் மாநிலத்தையே புரட்டிப் போட்டு விட்டது. இப்போது அதிக வெள்ளப் பெருக்கு, சீரற்ற மழை ஆகிய பிரச்னைகளுடன், நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் கட்டுமான கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும் கலப்பதால், ஆற்று மாசும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நதி நீரைப் பயன்படுத்தும் விவசாய நிலங்களில் கட்டுமான மாசுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பயிர் மாற்றங்களை விவாயிகள் சாகுபடி ஏற்றுக் கொள்ளத் தொடங்கி உள்ளனர். ஜூன் மற்றும் ஜுலையில் விதைக்கும் அரிசி உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்குப் பதிலாக, நவம்பரில் விதைக்கும் கடுகு, உருளை, பட்டாணி உள்ளிட்ட ரபி (குளிர்கால) பயிர்கள் மாறி உள்ளன. வேறு சிலர் ஓட்டு மொத்தமாக விவசாயத்தையே விட்டுவிட்டு வேறு வேலை தேடி அந்த நகரங்களுக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலைமை வரும் காலங்களில் இன்னும் மோசமாகும் என்றே கணித்துள்ளனர். “இமயமலைப் பிராந்தியத்தில் உள்ள 12 மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் அஸ்ஸாம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்” என ஐஐடி குவஹாத்தி, ஐஐடி மாண்டி ஆகியவை ஆய்வில் தெரிவித்துள்ளன.
1971-2000 ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருவ நிலை மாற்றங்கள் நடப்பு நூற்றாண்டு மத்தியில் 1.70 – 2.20 செல்ஷியஸ் வரை சராசரியாக அதிகரிக்கலாம் எனக் கணித்துள்ளனர். மழையும் 5% – 38% வரை அதிகம் பொழியும் என்றும் வெல்லங்கள் 25% அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அஸ்ஸாம் மாநில தேமாஜி மாவட்டத்தில் உள்ள நில அமைப்பே வெள்ளத்துக்குக் காரணமாக உள்ளது. 3000 மீட்டர் உயரமுள்ள திபெத்தில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா ஆறு, 150 மீட்டர் உயரமுள்ள அருணாசலப் பிரதேசத்திலும், பின்னர் அஸ்ஸாமில் நுழையும் போது, பயங்கர அழுத்தத்துடனும், அதீத வேகத்துடனும் பாய்கிறது. இதுவே பெரு வெள்ளத்துக்கும், பேரழிவுக்கும் என்று கிராமத் தன்னார்வ மைய இயக்குனர் லூட் கோஸ்வாமி.
மேலும் பிரம்மபுத்ரா ஆற்றுடன் அருணாசலப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் 14-க்கும் அதிகமான கிளை நதிகளும், நீரோடைகளும், ஓடைகளும், தேமாஜி மாவட்டத்துள் பாய்ந்து வெள்ளம், மணல், வண்டல், குப்பை, படிவு, ஆற்றங்கரை அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கி சேதப்படுத்துகின்றன. மேலும், சாலைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள், அணைகள் மற்றும் பிற கட்டுமானப் பணிகளின் போது சேரும் குப்பைகளும் நதியில் கலந்து ஆற்றுப்படுகையை உயர்த்தும் வாய்ப்புகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளப் பெருக்கின் போது மணலும் வண்டலும் விவசாய நிலத்தில் பாய்கிறது. வெள்ளம் வடிந்த பிறகு தண்ணீர் காய்ந்தாலும், மணலும், வண்டலும் அப்படியே நிலத்தில் தங்கிவிடுகிறது. விவசாய நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு நெல் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லை என்பதால் விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீர் வடிந்த பிறகு வண்டல் அதிகம் கலந்தால் கடுகு, உருளை, பட்டாணி போன்றவற்றின் சாகுபடிக்கு ஏற்றதாக செழிப்பாக இருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக வண்டலை விடவும், மணலே அதிகம் நிலத்தில் கலந்து நாசப்படுத்துவதால் மாற்றுப் பயிர்களுக்கும் சாத்தியமில்லை. 2019-ல் மேற்கொண்ட ஆய்வு விவசாய உற்பத்தி குறைய முக்கியக் காரணம், நிலத்தில் அதிக அளவு மணல் கலப்பே எனத் தெரிவிக்கிறது. மணல் படிவுகளுடன் தேமாஜி மாவட்டமே இப்போது பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.
நெல்லுக்கு அதிக அளவு தண்ணீர் தேவை. ஜூன், ஜூலை மழைக் காலத்தில் அதிக அளவில் சாகுபடி செய்வதால் காரீஃப் பயிர் என அழைக்கப்படும். ஆனால் அதிக மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்ததால், தேமாஜி மாவட்டத்தின் பெரும்பான்மையான இடங்களில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1992 முதல் 2004 வரையிலான காலத்தில் நெல் சாகுபடி பகுதி 11% குறைந்து காணப்பட்டது. ஆனால், மாநிலத்தின் தற்போதைய நிலைமை கொஞ்சம் சீரடைந்ததால், நெல் சாகுபடியில் சராசரியை விடவும் இம்மாவட்டச் சராசரி அதிகரித்துள்ளதையும் மாநிலப் பேரிடர் மேலாண்மை வாரிய அறிக்கை தெரிவிக்கிறது.

விவசாயிகளின் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அஸ்ஸாமிலுள்ள வடக்கு லக்கிம்பூர் மற்றும் மேகாலயாவிலுள்ள பிராந்திய விவசாய ஆய்வு மையங்கள், மணல்-வண்டல் படிவுகளை ஜிஐஎஸ் மற்றும் செயற்கைக் கோள்கள் மூலமாக ஆய்வு மேற்கொண்டனர். அடிக்கடிஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக வேளாண்மை பாதிக்கப்பட்ட தேமாஜி மாட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை மற்றும் வண்டல்மண் பாதித்த நிலங்களில் எந்த வகையான பயிர்களைச் சாகுபடி செய்யலாம் என்றும் பரிசோதனைகள் நடத்தின. கடுகு உள்ளிட்ட எண்ணை வித்துக்கள், நெளி கோதுமை, மூலாம்பழம் ஆகியவற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது என்பதால் அவை பரிந்துரைக்கப்பட்டன.
பாவோ (பாவோ) என்னும் ஒருவகை அரிசியில் மாவு, கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நன்கு முதிர்ச்சி அடைய ஒன்பது மாதங்கள் ஆகும். வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் கூட இவற்றைச் சாகுபடி செய்யலாம். தண்ணீர் அளவு உயரும் போதும் நெற்பயிரும் 10-12 அடி உயரம் வளரும். பாவ் (பாவோ) அரிசி அல்லது சிகப்பு அரிசி மற்றும் ஆழமான தண்ணீரிலும் பயிராகும் ஒரு வகை அரிசி ஆகியவற்றுக்கு அஸ்ஸாமிலுள்ள தேமாஜி மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் நல்ல எதிர்காலம் உள்ளது’ என்கிறார் ஆரண்யக் அரசு சாரா அமைப்பான ‘வாட்ச்’ தலைவர் பார்த்தஜோதி தாஸ்.
இயற்கை கழிவுகள் மற்றும் பசு சாணம் ஆகியவை மூலம் பாழடைந்த நிலத்தை மீண்டும் செழிப்பாக்கலாம். ஆனால் விவசாயத்துக்கு ஏற்ற விளை நிலமாக மாறக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும். அதுவரை மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நிலம் மறுபடியும் பாழாகாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், தொடர்ந்து வருடா வருடம் வெள்ளம் வந்து கொண்டே இருந்தால் விளை நிலமாக மாறுவதற்குச் சாத்தியமே இல்லை.
விவசாயம் இலாபகரமாக இல்லாத காரணத்தால் வேளாண் அடிப்படையிலான வாழ்வாதாரங்கள் முற்றிலுமாகக் குறைந்துவிட்டன. அன்றாட தினக் கூலிக்கு வெளி மாநிலங்களுக்குப் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். எனவே இருக்கும் ஒரு சில வேளாண் பணிகளுக்கும் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. ஆண்கள் வேலை தேடிச் சென்ற பிறகு பெண்கள் மட்டுமே உள்ளூரில் கால்நடைகளைக் கவனித்துக் கொண்டு வெள்ளம் வந்தால் வீட்டைச் சுத்தப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தால் மண் வளம் குறைந்து விட்டது. நெல் சாகுபடி சாத்தியமில்லை என ஒரு சிலர் கூறினாலும், தேமாஜி பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சி அலுவலகத் தொகுதி வளர்ச்சி அதிகாரி நபீன் கமன் மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார். ‘விவசாயத் துறையில், பயிர் சாகுபடியில், தேமாஜி மாவட்டம் வளர்ச்சி பெற்று வருகிறது. ரபி பயிர்களுடன், தேயிலை, தோட்டக்கலை, ரப்பர் தோட்டங்கள் ஆகியவை சிறு அளவில் பெருகி உள்ளன. இன்னும் சில விவசாயிகள் மக்காச் சோளம், முட்டைக் கோஸ், காளிஃப்ளவர் ஆகியவற்றை வணிக ரீதியாகச் சாகுபடி செய்து வருகின்றனர். அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் மத்திய அரசு பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் மூலம் நிலமுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் வருமானமாக ரூ.6000 கொடுத்து உதவியது. இதன் காரணமாக தேமாஜி பயிர் சாகுபடி முறையில் மாற்றம் உள்ளது’ என்றார்.
-ஜனனி ரமேஷ்