தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கடந்த 2009-ம் ஆண்டு நடிகையும் திரைப்பட இயக்குநருமான ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இவர்கள் ‘பத்ரி’, ‘ஜானி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னை வில்லி போல நடத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார் ரேணு.
கடந்த சனிக்கிழமை தன் மகன் அகிராவின் 19-வது பிறந்த நாளில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் தன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் ரேணு. அதற்கு பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர், ‘எங்கள் சகோதரர் (பவன் கல்யாண்) மகனின் முகத்தை எங்களிடம் இருந்து மறைத்து அநியாயம் செய்துள்ளீர்கள்’ என்பது போல் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ரேணு, ‘அகிரா என் மகன். உங்கள் சகோதரரின் மகன் மட்டும் அல்லர். நீங்கள் தாய்க்குப் பிறக்கவில்லையா? நீங்கள் பெரும் ரசிகர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கண்ணியமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உணர்ச்சியற்றவர்கள்’ எனக் கூறியிருந்தார்.