மதுரை – மதுரை மார்க்கெட்டுகளுக்கு நடுவில் நெரிசலில் சிக்கி தவிக்கும் மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைப்பை தமிழக அரசு கைவிட வேண்டும். அதற்கு பதில் பறக்கும் பாலம், வழிச்சாலை என நெரிசல் இல்லாத நத்தம் ரோட்டில் ‘டைடல் பார்க்’ அமைக்கலாம் என ஐ.டி., ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இன்று வரை மாட்டுத்தாவணியில் எங்கு அமைக்கலாம் என்ற குழப்பம் நீடிக்கிறது. எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மைதானத்தில் அமைக்க வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கனவே 2 பஸ் ஸ்டாண்டுகள், நெல் வணிக வளாகம், காய்கறி, பழம், பூ, மீன் மார்க்கெட்டுகள் என மாட்டுத்தாவணி நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இது போதாது என வெங்காய மார்க்கெட்டும் வரப்போகிறது. ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும்’ இங்கு, ஐ.டி., நிறுவனங்கள் வர கண்டிப்பாக தயக்கம் காட்டுவர்.
எனவே, ‘மார்க்கெட்’டுகளின் ‘டார்க்கெட்’டான மாட்டுத்தாவணிக்கு பதில் நத்தம் ரோட்டில் டைடல் பார்க் அமைக்கலாம். ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் 7.3 கி.மீ.,க்கு பறக்கும் பாலம், துவரங்குறிச்சி வரை புதிய நான்கு வழிச்சாலை என மத்திய அரசு மதுரை மக்களுக்கு பெரிய பரிசை கொடுத்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் இல்லாத ஊமச்சிகுளம் டூ மந்திகுளம் பகுதி டைடல் பார்க் அமைக்க சரியாக இருக்கும். வாடிப்பட்டி, அலங்காநல்லுார், மந்திகுளம், அழகர்கோவில் ரோடு, ஒத்தக்கடை, மேலுார் ரோடு வரை புதிய ரோடு, பாலமும் அமைகிறது. பறக்கும் பாலம், நத்தம் ரோடு வழி திருச்சிக்கு சென்றால் 23 கி.மீ., பயண நேரமும் குறைகிறது.
இத்தனை வசதிகள் இருப்பதால் ஐ.டி., நிறுவனங்கள் விரும்பி வரும். பின்தங்கியுள்ள இப்பகுதியும் முன்னேறும். அங்குள்ள இளைஞர்கள், கிராமத்தினருக்கு பல்வேறு வகையில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என பகுதி ஐ.டி., ஆர்வலர்கள் பதிவு.