இன்றைய இணையதள உலகில் எங்கிருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும், பேசுவதும் என்பது எளிதாக ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் இந்த இணையம், முகம் தெரியாத பலருடன் பழகுவதற்கு ஓர் ஊடகமாகச் செயல்படுகிறது. அவ்வாறு இணையத்தில் யாரென்றே தெரியாத, எங்கோ இருப்பவருடன் பழக்கம் ஏற்பட்டது அத்தகைய நபரைக் காண நாடு கடந்துசென்ற சம்பவங்களும் நிறைய உண்டு. அவை சில நேரங்களில் நல்லபடியாகவும், சிலநேரம் விபரீதமாகவும் முடிந்திருக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவர், தனது தந்தைக்கே தெரியாமல் அவரின் காரை எடுத்துக்கொண்டு, ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்ட நபரைக் காண்பதற்காக 640 கி.மீ சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஜெட் கிரிகோரி (ஜேட் கிரிகோரி) எனும் 12 வயது சிறுமி, ஃபுளோரிடா (புளோரிடா) மாகாணத்தின் யூனியன் கவுன்ட்டியில் (யூனியன் கவுண்டி) வசிப்பவராவார்.
இவர் கடந்த வாரம் தனது 14 வயது தோழி குளோ லார்சனுடன் (க்ளோ லார்சன்) சேர்ந்துகொண்டு, ஆன்லைனில் பழக்கமான நபரைக் காண லூசியானாவுக்குச் சென்று முடிவுசெய்து காரில் புறப்பட்டார். இவ்வாறு திடீரென இவர்கள் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இவர்கள் காணாமல் போனதாக மாகாணம் முழுவதும் தொலைக்காட்சிகளில் தகவல்கள் ஒளிபரப்பப்பட்டன.

பின்னர் அலபாமாவிலுள்ள (அலபாமா) ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் தொலைக்காட்சியில் தங்களுடைய படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இந்தச் சிறுமிகள், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்துக்குச் சென்று தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். பிறகு சிறுமிகள் பாதுகாப்பாக வீட்டுக்குவந்து சேர்ந்தனர். அதே சமயம் சிறுமிகள் சந்திக்கச் சென்ற நபர், அவர்களைக் கடத்த முயன்றாரா என்றும் போலீஸார் விசாரிக்கின்றனர்.