சென்னை: தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக வருமான வரி வசூலானதாக வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழகம், புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன், சிலையை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்:
தமிழகம் மற்றும் தமிழர்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷமாக கிடைத்தவர் திருவள்ளுவர். மக்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் கற்றுத் தந்துள்ளார். பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும்கூட, இன்றைக்கும் திருக்குறள் நம் வாழ்க்கையுடன் நன்கு பொருந்துகிறது. பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலரும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுகின்றனர்.
திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வருமான வரித் துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் காட்சிப்படுத்தப்படும்.
தமிழகத்தில் கடந்த 2022-23 நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 200 கோடி வருமான வரி வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கைவிட அதிகமாக, அதாவது ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி வசூலாகியுள்ளது.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 லட்சத்தில் இருந்து 77 லட்சமாக அதிகரித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க ஆதார் – பான் எண்ணை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.