தமிழ்நாட்டில் உள்ள இன்னொரு பயிற்சி மையமான சேலத்தில் கூடைப்பந்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் அங்குள்ள பெண்களுக்கான இடங்கள் தரப்படவில்லை. கைப்பந்து பயிற்சிக்கு தமிழ்நாட்டில் வேறு பயிற்சி மையமே இல்லை. அப்படியெனில் பெண் கூடைப் பந்து வீரர்கள், பயிற்சிக்கு எங்கு செல்வார்கள்?
உத்தரப் பிரதேசம், வாரணாசி மையத்தில் கூடைப்பந்து பெண் வீரர்கள் பயிற்சி பெற இடங்கள் தரப்பட்டுள்ளன. இல்லையெனில் சட்டிஸ்கர் செல்ல வேண்டும். இந்த இரண்டு ஊர்களில் மட்டுமே கூடைப்பந்து பயிற்சிக்கு பெண்களுக்கான இடங்கள் மேற்கண்ட சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் விமர்சனம் செய்யப்பட்டது. கலாசார பாலம் அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் அறிவித்தார்கள். நமது முடிகண்டநல்லூர் புஷ்பாக்கள் இந்தப் பாலத்தின் வழியாக வாரணாசிக்குச் செல்ல வேண்டியிருக்கும் என அப்போது அறிந்திருக்கவில்லை. தற்போது இங்கு மதுரை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனைகள் பள்ளிப் படிப்பையும், கூடைப்பந்து பயிற்சியையும் ஒரு சேரப் பெறுகிறார்கள்.