இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும் என்றும், குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் தேவையில்லை என்றும் மத்திய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும். குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடைய தேவையில்லை. நீண்டகால சராசரி அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகோபாத்ரா விளக்கம் அளிக்கையில், “மே மாத இறுதி வாரத்தில் தென்மேற்குப் பருவமழை விரிவான தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிடுகிறது. பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை இந்தியாவின் பருவமழையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என்றார்.

2003-ம் ஆண்டு முதல் தென்மேற்குப் பருவமழை தொடர்பான முன்னறிவிப்புகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. முதல் முன்னறிவிப்பு ஏப்ரல் மாதத்திலும், 2-வது முன்னறிவிப்பு மே மாதம் இறுதியிலும் வெளியிடப்படுகிறது. 2021-ம் ஆண்டு முதல் இதில் வானிலை ஆய்வு மையம் மாற்றங்களைக் கொண்டு வந்தது. மாதாந்திர மற்றும் அந்தந்த காலத்திற்கேற்ப முன்னறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. புதிய உத்தியின் அடிப்படையில் நிலையான மற்றும் மாறுபாட்டிற்குள்ளாகும் முன்னறிவிப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link