முதுமலை: பிரதமர் வருகையையொட்டி நான்கு நாட்கள் மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் நேற்று திறக்கப்பட்டது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 6-ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிரதமர் வந்து சென்ற பின்னர் நேற்று பிற்பகலில் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்தனர். அவர்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். பின்னர் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், வளர்ப்பு யானைகளுக்கு உணவு கொடுப்பதை பார்த்து மகிழ்ந்து, யானைகள் முன்பு நின்று செஃல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

பிரதமர் வருகையை தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் உண்ணிச் செடிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட யானை உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுற்றுலா பயணிகள் இந்த யானை உருவங்களை பார்த்து ரசித்ததுடன், அவற்றின் முன்பு நின்று செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.பிரதமர் வருகைக்குப் பிறகு தெப்பக்காடு முகாமில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள விடுதிகள், உணவகங்களும் திறக்கப்பட்டுவிட்டன.





Source link