புதுடில்லி, ஏப். 12- ‘பாரத ஒற்றுமை யாத்திரையுடன், கட்சியில் என் ‘இன்னிங்ஸ்’ முடிவடைந்தது; நான் தலைவரில்லை’ என, சில மாதங்களுக்கு முன் தெரிவித்த, காங்., முன்னாள் தலைவர் சோனியா, தற்போது, ’நாட்டின் அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும்’ என, மீண்டும், ‘வாய்ஸ்’ கொடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க, அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை, தேசிய அரசியலில் விவாதப் பொருளாக உள்ளது.
இதில் அவர் எழுதிஉள்ளதாவது:
நாட்டின் நிர்வாகம், நீதித்துறை, சட்டம் இயற்றும் சபைகள் ஆகியவற்றை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் வாயிலாக ஜனநாயகத்தின் மீது, அவர்களுக்கு உள்ள வெறுப்பு வெளிப்படுகிறது.
அரசின் ஒவ்வொரு செயல்பாடும், ஜனநாயகத்தின் வேரையே பிடுங்கி ஏறிய வகையிலும் உள்ளன. பா.ஜ.,வினரும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும் வெறுப்பை துாண்டும் வகையில் பேசி வருகின்றனர்.
கடமை
மத ரீதியான பண்டிகைகளும், விழாக்களும் மற்றவர்களை மிரட்டுவதற்கான நிகழ்வுகளாக மாறி வருகின்றன. அடுத்த சில மாதங்கள், நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமானவை.
பல மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில் வெற்றி பெறுவதற்காக அதிகாரத்தை வளைக்கும் அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்.
அரசமைப்பு சட்டத்தையும், அதன் கொள்கைகளையும் பாதுகாப்பதற்காக ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன், காங்கிரஸ் இணைந்து செயல்படும்.
காங்கிரசின் இந்த போர், மக்களின் குரலை பாதுகாப்பதற்கானது. பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எங்கள் கடமையை புரிந்து வைத்துள்ளோம். இந்த நோக்கத்தை அடைய ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட, காங்கிரஸ் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் அதில் எழுதியுள்ளார்.
அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக, ஒருங்கிணைந்த கூட்டணி அமைப்பதில், எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தயங்குகின்றன.
அழைப்பு
‘காங்கிரஸ் தேசிய கட்சி என்ற எண்ணத்துடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். காங்கிரசுக்கு ஒரு சில மாநிலங்களில் தான் செல்வாக்கு உள்ளது. பிராந்திய கட்சிகள் தான் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன’ என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சமீபத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தற்போது சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2017ல், தன் மகன் ராகுல், காங்கிரஸ் தலைவராக பதவியேற்க வசதியாக, கட்சித் தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகினார்.
ராகுல் காங்., தலைவராக பதவியேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், செய்தியாளர்கள் சோனியாவிடம், ‘ராகுல் தலைவராகி விட்டால், உங்களின் அடுத்த கட்ட பணி என்ன?’ என, கேள்வி எழுப்பினர்.
இதற்கு சோனியா, ‘என் அடுத்த கட்ட பணி ஓய்வு தான்’ என்றார். ஆனாலும், அரசியலில் தொடர்ந்து இயங்கி வந்தார்.
கடந்த பிப்ரவரியில் மாநிலம் சத்தீஸ்கர் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் பேசிய சோனியா, ‘இனி நான் தலைவரவில்லை. பாரத ஒற்றுமை யாத்திரையுடன் என் ‘இன்னிங்ஸ்’ முடிவடைந்தது’ என்றார்.
இந்நிலையில், அடுத்த லோக்சபா தேர்தலுக்காக மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தற்போது சோனியா மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.