`யாதும் ஊரே, யாவரும் கேளிர்…’ என்று வரவேற்கப்படுவதால் என்னவோ, தமிழகத்தில் பானிப்பூரி வியாபாரம் தொடங்கி அனைத்து வேலைகளிலும், வடமாநிலத் தொழிலாளர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். இந்தச் சூழலில், விவசாய வேலைகளிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவதால், அதற்கான வேலை வாய்ப்பும் உருவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி சிறுவளையம் கிராமத்தில், நெல் நாற்று நடவுச்செய்யும் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அவர்களுக்கு வேலை கொடுத்த நிலத்தின் உரிமையாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவருமான சுபாஷ் கூறுகையில், ”மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் ஒன்பது பேர், பெண்கள் ஒன்பது பேர் என மொத்தம் 18 பேர் நடவுப் பணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள், முழுக்க முழுக்க விவசாய வேலைகளை மட்டுமே செய்ய கூடியவர்கள். சென்னையிலுள்ள ஏஜென்ட் ஒருவர் மூலம் 18 பேரையும் என்னுடைய நிலத்துக்கு அழைத்து வந்துள்ளேன். ஏக்கருக்கு 4,500 ரூபாய் கூலியாக வழங்குகிறேன்.