சிங்கப்பூரில் NTUC (National Trades Union Congress) நடத்தும் நியாய விலைக் குழு பல்பொருள் அங்காடி, தன் ‘இஃப்தார் பைட்ஸ்’ என்னும் புதிய திட்டத்தை கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையொட்டி தனது 60 விற்பனை மையங்களிலும் சிற்றுண்டிகள் அல்லது பேரீச்சம்பழங்களுடன் கூடிய பானங்களை வழங்குகிறது.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தங்கள் கடைக்கு வரும் இஸ்லாமிய வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் தொழுகையை ஒட்டி இலவசமாக இவற்றை வழங்கப்படுகிறது. கடை மேஜையில் சிற்றுண்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், நோன்பு திறக்கும் போது தேவையான உணவுகளை வாடிக்கையாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

ஜஹபர் – ஃபரா

இந்நிலையில், இந்த இஃப்தார் சிற்றுண்டியை இந்தியர் எடுக்கக்கூடாது எனக் கூறியதற்குத்தான், தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளது அந்த அங்காடி. ஜஹபர் ஷாலிஹ் (36) மற்றும் அவரின் மனைவி ஃபரா நாத்தா (35) இருவரும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 9-ம் தேதி சிங்கப்பூரில் NTUC நடத்தும் நியாய விலைக் குழு பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு இஃப்தாருக்காக வைக்கப்பட்டிருந்த சிற்றுண்டியை ஜஹபர் எடுக்க நினைத்துள்ளார். ஆனால் அவரை எடுக்க விடாமல் தடுத்த கடை ஊழியர் ஒருவர், இந்தியர்களுக்கு இல்லை என மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜஹபரின் மனைவி ஃபரா, தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இது பற்றி பேசியுள்ள ஜஹபர், “இஃப்தார் சிற்றுண்டி வழங்குவதை நியாய விலைக் குழுவின் நல்ல செயல் என நினைத்து, நான் அங்கு எழுதப்பட்ட அறிவிப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் வந்த கடை ஊழியர் ஒருவர், `இந்தியர்களுக்கு இல்லை’ எனக் கூறினார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. மீண்டும் நான் அவரிடம் கேட்டபோது `இந்தியர்களுக்கு இல்லை’ எனக் கூறினார். அது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. அதற்கான காரணத்தை நான் கேட்டபோது அவர் எந்த விளக்கமும் தராமல் தன் உயர் அதிகாரிகளிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறினார்.

இஃப்தார் பைட்ஸ்

இந்த செய்கையால் விரக்தியடைந்த நான், அங்கிருந்து வெளியேறி என் ஷாப்பிங்கை தொடர்ந்தேன். ஆனால் இதை அறிந்த என் மனைவி, இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வர நினைத்து அங்கு நடந்தவற்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பவே, இதற்கு மன்னிப்பு கோரியுள்ளது NTUC. “நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். மேலும் இந்த சம்பவத்துக்கு அந்த தம்பதியிடம் மன்னிப்பு கோர விரும்புகிறோம். நாங்கள் எங்கள் ஊழியருக்கு அறிவுரை வழங்கினோம். ரம்ஜான் காலத்தில் அனைத்து முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கும் இப்தார் உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று பல்பொருள் அங்காடி குறிப்பிட்டுள்ளது.



Source link