மோடி அரசு அனைத்து அதிகாரங்களையும் தவறாக பயன்படுத்துகிறது எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அவர் தனியார் செய்தி நிறுவனம் எழுதிய கட்டுரையில், “மத்திய பா.ஜ.க அரசு நீதித்துறை, நிர்வாகம், நாடாளுமன்றம் என்ற மூன்று ஜனநாயக தூண்களையும் சேதப்படுத்தி வருவதைப் பார்க்கிறேன். கூட நாட்டின் முக்கிய பிரச்னையான பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், சமூக வன்முறை நிகழ்வுகள், அதானி விவகாரம், பட்ஜெட் குறித்த கேள்விகள் போன்றவை குறித்துப் பேச விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு நாடாளுமன்ற முடக்கத்தை அரங்கேற்றியது.

அதற்காக, எதிர்க் கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு எனச் சூழ்ச்சிகளை அவிழ்த்துவிட்டு, எந்த எதிர்க் கேள்விகளே இல்லாமல் 45 லட்சம் கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்றவற்றை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டுமே 95 சதவீத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் மீதான வழக்குகள் காணாமல் போகிற அதிசயமும் நடந்தது.