பட்டாசாக வெடிக்கும் அரசியல் நையாண்டி வசனங்கள்
பிரதான பாத்திரங்களைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்களும் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் மாயத்தை பாலசந்தர் எப்போதும் நிகழ்த்துவார். இந்தப் படத்தில் ‘டெல்லி நாயக்கர்’ என்றொரு கேரக்டர் வருகிறது. காரசாரமான அரசியல் விமர்சனங்களை, நையாண்டியான மொழியில் சொல்லி விட்டு ‘நமக்கு எதுக்குப்பா பொல்லாப்பு?’ என்கிற பாவனையுடன் பிறகு விலகிச் சென்று விடும். டெல்லி நாயக்கர் வரும் காட்சிகள் எல்லாம் ரகளையான அரசியல் கிண்டல்கள் வசனங்களாகவும், காட்சிகளாகவும் வெளிப்படுகின்றன. ‘அரசியல் ஞானி அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுவான், அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுவான்’ என்பது போன்ற ‘சுளீர்’ வசனங்கள் படம் முழுவதும் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. பொங்கி வழியும் நரைத்த முடி, பெரிய மீசை, ஜிப்பா, சோடா புட்டி கண்ணாடி என்று அறிவுஜீவியாக வலம்வரும் இந்தப் பாத்திரத்தை பிரபாகர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

இன்னொரு சுவாரஸ்யமான கேரக்ட்டர் ‘சுதந்திரம்’. ஆம், இந்தப் பாத்திரத்தின் பெயர் அது. இப்படியொரு வில்லங்கமான பெயரை ஒரு பாத்திரத்திற்குச் சூட்டி விட்டு அதை வைத்து படம் முழுவதும் ரகளையாகக் கிண்டடித்திருக்கிறார்கள். உயரம் குறைவான இந்தப் பாத்திரத்தைச் சுட்டிக் காட்டி, “சுதந்திரம்… நீ இன்னும் வளரவேயில்லையே?” என்ற நாட்டு நிலைமையைச் சூசகமாகச் சுட்டிக் காட்டுவார் டெல்லி நாயக்கர்.வீரய்ய்யா என்கிற நடிகர் இந்தப் பாத்திரத்தைச் சுவாரஸ்யமாகக் கையாண்டுள்ளார்.