சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழாவையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட தி.மு.கவினர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை.அதனால், வழியிலும் பயமில்லை.
அவர் வெளியிட்டால் வெளியிடட்டும்…எங்களது அமைச்சர்கள் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள். தமிழக ஆளுநரிடம், துணைவேந்தர் விவகாரம் உள்ளிட்ட 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அதற்கும் அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம். மத்திய அரசு இந்த ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளை விமர்சியாக கொண்டாடுவதன் நோக்கம் என்னவென்றால், அடுத்த ஆண்டு தேர்தல் வர இருப்பது தான் காரணம்” என்றார்.