இந்த நீண்ட காட்டுயிர் தொடரின்போது, ​​என் மனதைத் தொட்ட சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்!

நான் ஆப்பிரிக்க காடுகளுக்கு ஐந்து முறை பயணம் செய்திருக்கிறேன். வருடத்திற்கு 4 லட்சம் பேர் வருகை புரியும் இந்தச் செரங்கெட்டி தேசியப் பூங்காவில் எவ்வளவு குப்பைகள் விதைக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் இங்குள்ள காடுகளில் ஒரு பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் கூட எங்கும் தென்படவில்லை.

செரங்கெட்டி தேசிய பூங்கா

அந்த மக்களிடையே உள்ள சுயகட்டுப்பாடும் காட்டை நேசிக்கும் குணமும் இதற்கு காரணமாகும். இந்தக் காடும், காடு சார்ந்த சுற்றுலாவும்தான் நமக்கு வாழ்க்கை அளிக்கிறது என்பதை தான்சானியா மக்கள் மட்டுமின்றி பூர்வகுடிகளான மசாய் மக்களும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் காடுகளைக் கவனத்துடன் பாதுகாத்து வருகின்றனர். இதை நன்கு உணர்ந்த தான்சானியா அரசும் பூர்வகுடிகளான மசாய் மக்களைச் சுற்றுலாப் பணிகளில் ஈடுபட வைத்து அவர்களையும் வாழ வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள முதுமலை வனவிலங்கு சரணாலயம், இங்கு வாழும் பூர்வகுடிகளைக் கொண்டு ஒரு “மகளிர் சுய உதவிக் குழு” அமைக்கப்பட்டு, இந்தக் குழுவின் சார்பாக அங்குள்ள தமிழ்நாடு ஹோட்டல் நிர்வாகம் செய்யப்படுகிறது.

இன்றும் அருமையாகச் செயல்படும் இந்தத் “தமிழ்நாடு ஹோட்டல்” முதுமலை பூர்வகுடிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டைப் பாதுகாக்கும் ஒரு முயற்சி இது ஓர் அங்கம். பல நூறு ஆண்டுகளாக காட்டையே நம்பி இருக்கும் பூர்வ குடிகளுக்கு இம்மாதிரியான காடுகளுடன் இணைந்த பொருளாதார மேம்பாடு மிக முக்கியமானது.

சுற்றுலாப் பணிகளில் மசாய் மக்கள்

ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். இந்தப் பயணத்தின் போது ஓரிரு இடங்களில் சாப்பிடுவதற்காக வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. காட்டுக்கு வரும் சுற்றுலாவாசிகள் அங்குள்ள வண்டிகளை நிறுத்தி உணவருந்திக் கொண்டு இருப்பார்கள். அப்போது அங்கு வந்த வெளிநாட்டினர் ஒருவர் ஒரு சிகரெட்டை புகைத்துவிட்டு, அந்த அடிப்பகுதியை நன்கு அணைத்து, காலால் மிதித்து, அங்கிருந்த ஒரு சிறு மண் ஓட்டையில் போட்டுவிட்டார்.

பழங்குடி

சாப்பிட்டு முடித்து, கிளம்பும் நேரத்தில் அந்த வாகன ஓட்டுநர் ஓடிச்சென்று, அந்தச் சிகரெட் துண்டை எடுத்து வந்து கழிவுகள் கொண்டு செல்லும் பையில் போட்டுக் கொண்டு வண்டியை ஓட்டினார். சிகரெட் துண்டுகளால் காடு தீப்பிடிக்கும் அல்லது காட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு நன்கு உணரப்படும்.

இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் வரும் சுற்றுலாவாசிகள் தாங்கள் கொண்டுவரும், காலி பிளாஸ்டிக் பாட்டில்களைப் பூங்காவின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய கம்பிவலை தொட்டியில் போட்டு விடுகின்றனர். இங்கு சேரும் குப்பைகள் பெரிய டிரக் வண்டிகள் மூலம் காட்டைவிட்டு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் நமது காடுகளின் வெளிவட்ட பகுதிகள் மது அருந்தும் இடமாக, அருந்தி முடித்ததும் பாட்டில்களை உடைக்கும் குப்பைக் கூடங்களாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. நினைத்தால் நெஞ்சம் கணக்கிடுகிறது!.

காட்டுக்குள் உணவு

2004ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற, கென்யாவை சேர்ந்த “வங்காரி மாத்தாய்” சொன்னதை பகிர்கிறேன்.

“சூழலைக் கெடுக்கும் தலைமுறை வேறு, அதற்கான விலையைத் தரும் தலைமுறை வேறு”

“காடுகள் காக்கப்பட வேண்டும்” காடுகள் நமக்கானவை அல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கானவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

திரைப்படத் துறையினருக்கு ஒரு சிறு வேண்டுகோள்! மது அருந்தும் காட்சிகளை உங்கள் திரைப்படத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதில் நான் தலையிடவில்லை. ஆனால் மது அருந்தி முடித்ததும் பாட்டில்களை உடைக்கும் காட்சிகளை மட்டும் உங்கள் திரைப்படத்தில் வைக்காதீர்கள், அந்தக் காட்சிகளைப் பார்க்கும் இன்றைய குடி இளைஞர்கள் இதுவும் ஒரு சாகசம் என நினைத்துக் காடுகளில், ஏன் வசிக்கும் தெருக்களில் கூட பாட்டிலை உடைத்து செல்கின்றனர்.

கம்பிவலை தொட்டியில் பிளாஸ்டிக்பாட்டில்

இந்தக்கண்ணாடி பாட்டில்களை உடைப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது என நினைக்கிறீர்களா? நீங்கள் ஜெயமோகன் எழுதிய “யானை டாக்டர்” என்ற சிறுகதையைப் படித்துப் பாருங்கள்! வலி தெரியும்!

செரங்கெட்டி தேசியப்பூங்கா களிமண்ணால் ஆன நீண்ட சமவெளியை கொண்டது. இந்த தேசியப் பூங்கா முழுவதும் உருவாக்கப்பட்ட பாதைகள், நமது வாகனங்களால் உருவாக்கப்பட்ட வழித்தடம் மட்டுமே.

அதிக மழை காலங்களில் இந்த வாகனங்கள் களிமண் சகதியில் சிக்கிக் கொள்வதுண்டு. அவ்வாறு சிக்கும் வாகனங்களை அந்தப் பகுதியில் வரும் வாகனங்கள் கயிற்றால் கட்டி, மீட்டு வெளியில் கொண்டு வரும்.

அந்தப் பகுதியில் வாகனங்கள் வராவிட்டால், வாக்கி டாக்கி [walkie talkie ] மூலம் தகவல் சொல்லி வாகனங்கள் வருவதற்கு சில சமயம் நான்கு மணி நேரம் கூட ஆகலாம்.

ருஃபஸ்-நேப்ட் லார்க்

ஒருநாள் காட்டுப் பயணம் என்பது காலை 5 மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கு காலை உணவை முடித்து ஜீப்பில் ஏறும் எங்கள் குழு மாலை ஆறு மணிக்கு பயணத்தை நிறைவு செய்யும். இடையில் மதியம் உணவு இடைவெளிக்கு வண்டி ஓரிடத்தில் நிறுத்தப்படும்.

விலங்குகளை பார்த்துக்கொண்டே பயணம் மேற்கொள்ளும் நாங்கள் ஒரு நாளைக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வரை வாகனத்தில் செல்வோம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தங்கியிருக்கும் இடத்தை மாற்றி வேறு பகுதிக்குச் செல்வோம்.

செரங்கெட்டி காடுகளில் பயணம் செய்யும் நாட்களிலெல்லாம், தொடர்ச்சியாக ஒரு இசை காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அது அங்கு வாழும் ஒரு சிறிய பறவையின் குரல். அந்த பறவையின் பெயர்” RUFOUS-NAPED LARK” , செரங்கெட்டி காடுகள் முழுவதும் எங்கு சென்றாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் இந்த அழகிய குரல் இந்தத் தேசிய பூங்காவின் குரலாகவே (SOUNDS OF SERENGETI ) வர்ணிக்கப்படுகிறது.

இந்தத் தொடர் முழுவதும் புலிகள் பற்றிய எந்தத் தகவலையும் தரவில்லை. ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை. நான் கடந்த 17 வருடங்களாகக் காடுகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். வாகனங்கள் வழியாகவும், சில இடங்களில் கால்நடையாகவும், எனது பயணம் இருந்தது.

ஆனால் ஒரு முறை கூட விலங்குகளால் தாக்கப்படும் சூழ்நிலையோ, தாக்கிய சூழ்நிலையோ இல்லை. பெரும்பாலும் விலங்குகள் நம்மை விட்டு ஒதுங்கியே செல்லும். அவைகளுக்குத் தெரியும் ‘மனிதன் மிகப்பெரிய விலங்கு’ என்று.

டாக்டர் மணிவண்ணன்

எனது காட்டுயிர் ஆப்பிரிக்க அனுபவங்களுடன், உலகளாவிய காட்டுயிர் நிகழ்வுகளையும் இந்த 16 வாரங்களாக எனது இதய இதழான விகடன் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்த வாரத்துடன் எனது தொடரை நிறைவு செய்கிறேன்.

எனது காட்டுயிர் பயணத்தில் 16 வாரங்களாக இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய காடுகளைப் பற்றி எனது அனுபவங்களை தொடருகிறேன். தங்கள் கருத்துகளை எனது மெயில் ஐ.டிக்கு அனுப்பி வையுங்கள்.

manivannandia@gmail.com

– நன்றி!Source link