சீனாவில் சுமார் 1,000 விலங்கியல் பூங்காக்கள் உள்ளன. சீனாவிலுள்ள இந்த விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கை தீவில் மட்டுமே வாழக்கூடிய செங்குரங்குகளை வழங்குமாறு இலங்கை அரசிடம் சீனா கேட்டுள்ளது. இதற்கு இலங்கை அரசு மனமுவந்து சம்மதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன பிரதிநிதிகள் இலங்கை அரசு அதிகாரிகளுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடைசியாக ஏப்ரல் 11 அன்று இலங்கை விவசாய அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், முதல்கட்டமாக ஒரு லட்சம் செங்குரங்குகளை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர்.

மஹிந்த அமரவீர

இதுகுறித்து இலங்கை வேளாண்மைத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்,

“இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 30 லட்சம் குரங்குகள் உள்ளன. இலங்கையில் விவசாய நிலங்களில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே சுமார் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் சேதப்படுத்தியுள்ளது. மேலும் மற்ற பயிர் வகைகளையும் குரங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் அரசு குரங்குகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் சீனாவும் இலங்கை குரங்குகளைக் கேட்டது. இதையடுத்தே, குரங்குகளை சீனாவுக்கு அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள குரங்கை பிடிப்பது, அந்த குரங்குகளை தனிமைப்படுத்தி, நோய்கள் உள்ளதா என்று சோதனை செய்வது, அதன் பின் கூண்டுகளில் அடைத்து சீனாவுக்கு செல்வது என அனைத்து செலவுகளையும் சீனாவே ஏற்றுக்கொள்கிறது. இப்படி ஒரு குரங்கை கொண்டு செல்வதற்கு இலங்கை மதிப்பில் சுமார் 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை சீனா செலவிடும்” என்று தெரிவித்தார்.

குரங்கு

இலங்கை அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

“ஒரு பெரிய கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இலங்கை செலுத்த வேண்டிய தொகையை குறைக்க சீனா முன்வந்துள்ள நிலையில், பரிசோதனைக்காக குரங்குகளைக் கேட்கிறதா சீனா?

பூங்காவுக்கு குரங்குகளை வாங்க இவ்வளவு பணம் செலவு செய்யுமா சீனா… அவ்வளவு நல்லவனா? என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், “இறைச்சிக்காகவோ, அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்குகளையோ, விலங்கின் பகுதிகளையோ ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது. சீனா உண்மையில் எதற்காக, என்ன நோக்கத்திற்காகக் கேட்கிறது? முதல் கட்டமாக ஒரு லட்சம் குரங்குகள் என்றால் மொத்தம் எத்தனை முறை எவ்வளவு குரங்குகளைக் கேட்கிறார்கள் என்பதை அரசு அதிகாரிகள் தெளிவாக விளக்க வேண்டும்” என்ற சூழல் ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறுகையில், “இறைச்சிக்காக இவ்வளவு செலவு செய்து சீனர்கள் வாங்க மாட்டார்கள். எனவே, இறைச்சிக்கு பயன்படுத்த மாட்டார்கள். விலங்கியல் பூங்காக்களுக்குதான் செல்கிறது” என்று தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கை திருப்தி இல்லாத நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் இப்போது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், செங்குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், இதற்கு சட்டரீதியாக தீர்வு காணவும் குழு ஒன்றை அமைத்து, அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் மகிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

காடுகள், சூழல், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வுகள் தொடர்ந்து எழுதப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் டாக்டர் மணிவண்ணன். இதுகுறித்து கேட்டோம், அவர் கூறினார்,

“முகத்தில் அழகிய சிவப்பு நிறத்துடன் தோன்றும் இந்த குரங்குகள் நம்ம ஊர் குரங்குகள் (Bonnet Macaque) போல் தோற்றமளித்தாலும் முகத்தில் இதன் சிகப்பு தன்மையும், தலையில் தொப்பி போன்ற முடிகளும் அமைந்தாலும் நமது இந்திய குரங்கிலிருந்து சற்று மாறுபட்டு காணப்படும். இந்த செங்குரங்குகள் இலங்கைத் தீவில் மட்டுமே வசிக்கின்றன, உலகில் வேறு எங்கும் இவை கிடையாது.

டாக்டர் மணிவண்ணன்

நம்ம ஊரில் உள்ள சிங்கவால் குரங்குகள் தனி இனம், தென்னிந்திய மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மட்டுமே வசிக்கும் இவை உலகில் வேறு எங்கும் கிடையாது, அது போல, இந்த செங்குரங்குகள் இலங்கை தீவில் மட்டுமே வசிக்கின்றன. 1948-ல் உலகளாவிய IUCN (The International Union for Conservation of Nature) என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அதன்படி காட்டுயிர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* Extinct (EX) – அழிந்துவிட்ட இனம்

* காடுகளில் அழிந்து (EW) – மிருகக்காட்சி சாலையில் அல்லது வளர்ப்பு மிருகங்களாக மட்டுமே உள்ளவை.

* ஆபத்தான நிலையில் (CR) – அழிவின் விளிம்பில், காட்டில் ஓரிரண்டு எஞ்சியிருக்கும் விலங்குகள்

* அழியும் ஆபத்து (EN) – அழியும் ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள்.

* Vulnerable (VU) – எதிர்கால ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள் .

* Near threatened (NT) – தற்போது நல்ல நிலையில் உள்ளது, எதிர்காலத்திற்கு ஆபத்து செல்லலாம்.

* குறைந்த கவலை (LC) – நிறைய உள்ளது, ஆபத்து இல்லை.

தனி இனமான இவை IUCN பட்டியல் படி Endangered (EN)-ல் வருகிறது. அதாவது பாதுகாக்கப்பட வேண்டிய அழியும் ஆபத்தில் உள்ள காட்டுயிர்கள் என்ற பட்டியலில் வருகிறது.

இலங்கைத் தீவில் நகரமயமாக்கல் மற்றும் காடுகள் தேயிலை, காபித் தோட்டங்களாக மாற்றம் மற்றும் இயற்கையான மரங்களை அகற்றி வணிக மரங்கள் நடப்படுதல் போன்றவற்றால் வன உயிரினங்களுக்கு வாழ்விட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தக் குரங்குகளை வேட்டையாடும் வன உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைவதால் குரங்குகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.

இலங்கை தீவில் மூன்று மில்லியன் அளவில் இந்தக் குரங்குகள் உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், முறையான கணக்கெடுப்பு இல்லை, அதை உடனே மேற்கொள்ள வேண்டும் என இலங்கையில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்குரங்கு

மக்கள் பௌத்த ஆலயங்கள், கோயில்களுக்குச் செல்லும்போது குரங்குகளுக்கு உணவு தருவது கடவுளுக்கு உணவு தருவது மாதிரி, பெரும் புண்ணியம் என நினைத்து உணவுகளை வாரி வழங்குவதால் அவை காட்டுப் பகுதிக்குச் செல்லாமல், ருசி மிகுந்த மனிதனின் உணவையே நாடுகிறது.

நாள்கள் செல்லச் செல்லச் செல்லும் செயற்கை உணவுக்கு அவை பழகி விடுவதால் இயற்கை உணவைத் தேடும் திறன் குரங்குகள் இழந்துவிடுகின்றன. இதனால் மனிதன் வாழும் பகுதியை விட்டு அவை செல்ல மறுத்து மனிதனிடமிருந்து உணவை தட்டிப் பறக்கிறது, இதனால் மனித விலங்கு மோதலும் தாக்குகிறது.

விவசாய பூமியில் விவசாயத்தை இந்தக் குரங்குகள் சேதம் செய்வதால் மனிதனின் விவசாய வருமானமும் குறைந்து விடுகிறது. இப்படி பல காரணங்களால் குரங்குகள் மனிதனுக்கு தொல்லை தரும் விலங்காகவே மாறிவிட்டது.

ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை யாராவது ஒரு மீட்பர் வந்து நாட்டை மீட்டுவிட மாட்டாரா எனப் பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் முதல் கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளுக்கு வலை விரித்து இருக்கிறது உலகின் மிகப்பெரிய பொருளாதார மீட்பரான சீனா.

இந்தக் குரங்குகள் ஏற்றுமதியானால் இலங்கையின் குரங்குகள் எண்ணிக்கை குறையும் அது மறுப்பதற்கு இல்லை. ஆனால், இலங்கையின் உயிர் சமநிலை தன்மை (Ecosystem Diversity) மாறும் இதை உணர்ந்துகொள்ள இலங்கைக்கு பல வருடங்கள் ஆகும்.

உலகில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலங்குக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அங்குள்ள நோய்களுக்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும். இலங்கையில் இருந்து ஏற்றுமதி(?) செய்யப்படும் குரங்கில் இருந்து சீனாவில் உள்ள விலங்குகளுக்கு, அந்த விலங்குகள் இந்த நோய் எதிர்ப்பு தன்மையை பெறாமல் போனால் சீனாவில் உள்ள விலங்குகள் இதனால் பாதிக்கப்படும். ஏனெனில், இந்தக் குரங்குகள் அனைத்தும் சீனாவில் உள்ள மிருகக் காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சீனா சொல்லி இருக்கிறது.

இலங்கை

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை இங்கு நான் குறிப்பிடுகிறேன். 1887-ம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதும் கால் பதித்த பிரித்தானிய காலனி ஆதிக்கம், இத்தாலியில் தனது தேவைக்காக அதிகம் பால் தரும் மாடுகளை இறக்குமதி செய்தது.

அந்த இறக்குமதி செய்யப்பட்ட மாடுகளில் இருந்து விலங்குகளுக்கு ஏற்படும் பிளேக் நோய் (RINDERPEST) எனும் வைரஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் பரவியது. ஏறக்குறைய கொரனோ (Corona) மாதிரி!

இந்த நோயால் ஆப்பிரிக்க மக்கள் வளர்த்து வந்த 90 சதவீத கால்நடைகள் இறந்தன. ஏனெனில், அங்குள்ள கால்நடைகள் இதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருக்கவில்லை.

இதனால் நிலத்தை உழவு செய்ய, பால் மற்றும் மாமிசம் தர கால்நடைகள் இல்லாமல் போயின. விவசாயம் இல்லாததால் வறுமையும் பஞ்சமும் (Famine) ஆப்பிரிக்காவில் கோரதாண்டவம் ஆடியது.

ஆனால், எவ்வளவு நடந்தாலும் வரலாற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்வதில்லை. உலகெங்கும் சக மனிதனையே அகதியாக ஏற்றுமதி செய்யும் இலங்கை நாட்டுக்கு இந்தக் குரங்கு ஏற்றுமதி பெரிய விஷயம் இல்லை.

ஆனால், உயிர் சமநிலை இலங்கை நாட்டிலும், நோயால் சீன விலங்குகள் பாதிக்கப்படும்போது இதை இந்த நாடுகள் உணர்ந்து கொள்ளுமா? தெரியவில்லை.

உலகெங்கும் வன உயிரினங்கள் கடத்தல், சட்டத்துக்கு புறம்பான மிகப் பெரிய மோசமான தொழில். ஆனால், அந்தத் தொழிலை அரசாங்கங்கள் செய்யும்போது அது சட்டத்துக்கு உட்பட்டதா? என்பதை நீங்களே சொல்லுங்கள்” என்றார்.Source link