சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 2016-ல் தொடங்கி தற்போது வரை 12 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னை ஐஐடி-யில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திரத்தைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் விடுதி அறையில் கடந்த மார்ச் 14-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரு மாதத்துக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 13-ம் தேதி இதே சென்னை ஐஐடி-யில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஐஐடி சென்னை

இதனிடையே, சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார், வேளச்சேரியில், தான் தங்கியிருந்த வாடகை வீட்டில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். “என்னை மன்னித்துவிடுங்கள், இத்துடன் என்னுடைய வாழ்வை முடித்துக் கொள்கிறேன்… நான் நலமாக இல்லை” என வாட்ஸ்அப்பில் அவர் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் சச்சின் குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் அகிஷ் குமார் மாணவர்கள் அளித்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார், அதனைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐஐடி வளாகத்தில் கடந்த 11-ம் தேதி இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாணவர்களிடம் ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் 4 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஐஐடி போராட்டம்

1.பேராசிரியர் அகிஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.

2. சச்சின் குமாரின் அறை நண்பர்கள் உள்ளிட்ட சிலரை நிர்வாகம் கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பியிருக்கும் நிலையில், அவர்களை அழைத்து வந்து பொதுவெளியில் தங்கள் கண்முன் வைத்து விசாரிக்க வேண்டும்.

3. விசாரணைக் குழுவில் கல்லூரி ஆட்கள் மட்டுமின்றி வெளி ஆட்களும் பங்கேற்க வேண்டும்.

4. மாணவர்களின் தலைவரை (மாணவர்களின் டீன்) பணி நீக்கம் செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியர் அகிஷ்குமார் 3 வாரத்துக்கு வளாகத்திற்குள் வரமாட்டார் என மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சச்சினுடன் பயின்ற பெயர் வெளியிட விரும்பாத ஒரு மாணவரிடம் பேசினோம், “சச்சினின் மரணத்துக்குக் காரணம் கல்வி ரீதியான மனஅழுத்தம் கிடையாது. தனிப்பட்ட முறையில் பேராசிரியர் அகிஷ் குமாரால் கொடுக்கப்பட்ட மனஅழுத்தம் தான் காரணம். சச்சின் ஐஐடி மாணவர்களிலேயே மிகவும் திறமையானவர். அவர் ஏற்கனவே பல ஆய்வுகளை சமர்ப்பித்து Phd-க்கு தேர்ச்சி பெற்றவர். ஒரு மாநாட்டிற்கு பேராசிரியர் அகிஷ் குமாரிடம் தகவல் தெரிவிக்காமல் சச்சின் சென்றுவிட்டார். சச்சினை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த மாணவர்களை சச்சினுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார்.

ஆய்வகத்தில் படிக்கும் மாணவர்களை, சச்சினுடன் பேசக் கூடாது என உத்தரவிட்டார். ஆய்வகத்தில் சச்சினுக்கு உதவியாக இருந்த மாணவர் ஒருவர், சச்சினுடன் வேளச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

தற்கொலை

அந்த மாணவரை, `நீ ஐஐடி வளாகத்திற்குள் உள்ள விடுதியில் வந்து தங்கிக்கொள்’ என கட்டாயப்படுத்தினார். சம்பவம் நடந்த அன்று காலை ஆய்வகத்தில் தேர்வுத்தாளை சச்சின் சமர்ப்பித்தார். அப்போது இருவரும் தனியாக இருந்தனர்.

என்ன பேசினார்கள் எனத் தெரியாது. அதற்குப்பிறகுதான் சச்சின் ‘i am not good enough’ என வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். இதற்கு முன்பாகவே தன் பெற்றோரிடம் பேராசிரியர் அகிஷ் குமார் புகார் தெரிவித்திருக்கிறார். ஐஐடி இயக்குநர் காமகோடியிடமும் புகாரளித்திருக்கிறார். தற்கொலைக்குப் பிறகு சச்சினுடன் ஆய்வில் இருந்த மாணவி ஒருவரை ஐஐடி நிர்வாகம் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. போராட்டத்தின் போது இது குறித்து கேள்வி எழுப்பினோம். `அந்த பெண்ணுக்கு உளவியல் ஆலோசனை தேவை. அதனாலே வீட்டுக்கு அனுப்பினோம்’ என்றார் இயக்குநர் காமகோடி. அந்த பெண்ணும் சச்சினும் ஒன்றாக கலந்தாய்வுக்கு சென்றார்கள்.

சென்னை ஐஐடி

சச்சினை பழி வாங்குவதற்காக, இருவரும் வேறு வேறு நேரத்தில் ஆய்வகத்துக்கு வருமாறு பேராசிரியர் அகிஷ் குமார் கட்டளையிட்டார்.” என்றார்.

ஐஐடி-யில் சாதியப் பாகுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு, “அது நேரடியாக கண்களுக்குப் புலப்படும் படி இருக்காது. ஆனால் அப்படி இருக்கக் கூடும்.

முன்னதாக, சச்சின்குமார் தற்கொலை செய்துகொண்டது, மாணவர்களின் தற்கொலைகள் குறித்து சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்க மாணவர் பிரதிநிதிகள் உட்பட நிலையான விசாரணைக் குழுவும் சமீபத்தில் அமைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

ஐஐடிக்குள் என்னதான் நடக்கிறது. தொடர் தற்கொலைகளுக்கு தீர்வுதான் என்ன? என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம், “இந்தியா முழுவதும் பல உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு உள்ளது. சமூக ஊடகங்கள் காரணமாக தற்போது நடக்கும் தற்கொலைகள் உடனுக்குடன் வெளியே தெரிகிறது. மற்றபடி உள்ளே நடக்கும் பிரச்னைகள் நமக்கு தெரியாது. ஆனால் ஐஐடி-யில் சாதியப் பாகுபாடு இருப்பது உண்மை. பாலினப் பாகுபாடு இருப்பது உண்மை.

சென்னை ஐஐடி

பல்வேறு வகையிலான ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் பல்வேறு சமூக கட்டமைப்புகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு SUPPORT SYSTEM தேவைப்படுகிறது. இப்போது விசாரிக்கிறோம் என்கிறார்கள். என்ன விசாரிக்க போகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மாணவர் ஏன் இறந்தார் என விசாரிக்கப் போகிறீர்களா? இல்லை இது போன்ற தொடர் தற்கொலைகளின் காரணம் என்ன என்று விசாரிக்க போகிறீர்களா?. இந்த காரணத்தை அறிய மன நல ஆலோசகர் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி மாணவர்களின் கருத்துக்களை கேட்டு அறிய வேண்டும்.

அந்த பொறுப்பை ஐஐடி உணரவில்லை என்பதே என் குற்றச்சாட்டு. ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு தயாராவதே பெரும் மனஉளைச்சல். இதற்காக சில குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதலே கோச்சிங் கொடுக்கிறார்கள். சில குழந்தைகளுக்கு 8-ம் வகுப்புகள், 11-ம் வகுப்பிலிருந்து இந்த கோச்சிங் தொடங்குகிறது. இதனால் அந்தக் குழந்தைகள் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தனிமைப்பட்டுப் போகிறார்கள்.

அதையெல்லாம் கடந்து ஐஐடி-க்கு உள்ளே நுழையும் ஒரு மாணவர் இனி விடுதலை என்று கூட நினைக்க முடியாத வகையில் அங்கும் ஒரு பிரச்னை மேலோங்கியிருக்கிறது என்றால், அது மேலும் சிக்கல்தான். எனவே தான், நான் மேலே சொன்னபடி ஒரு விசாரணைக் குழுவை அமைத்து அதன் அறிக்கையை ஐஐடி பரிசீலிக்க வேண்டும். இல்லை எனில், குறைந்தபட்சம் ஐஐடி-யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாணவர் பேரவை உள்ளது. அதை வைத்தாவது மாணவர்களின் கருத்தை கேட்டறிந்து, மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இதற்கு முன் நடந்த தற்கொலைகளில் எத்தனை வழக்குகளில் காவல்துறை இறுதி அறிக்கை சமர்பித்துள்ளது.

ஏன் விசாரணை தாமதப்படுகிறது. ஐஐடி-யை நாம் புனிதமாகப் பார்க்கிறோமா.., தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை, சமூகப் பாதுகாப்புத் துறை, சமூக நீதிக் குழு, மாநிலப் பெண்கள் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் இவையெல்லாம் ஏன் ஐஐடி-க்கு உள்ளே செல்ல மறுக்கிறது.

ஒரு உயிர்போன போதே இவையெல்லாம் ஐஐடி வளாகத்துக்கு உள்ளே சென்றிருந்தால் அடுத்தடுத்து தற்கொலைகள் நிகழ்ந்திருக்குமா?. ஐஐடி வளாகத்திற்குள் ஒரு மனிதன் இறந்தால், விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளே செல்கிறார்கள். மான் மீதான அக்கறை ஏன் மனிதர்கள் மீதும், மாணவர்கள் மீதும் இல்லை. ஐஐடி தற்கொலை வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைத்தால் மட்டுமே எதிர்காலத்திலேனும் இதுபோன்ற தற்கொலைகள் தொடராமல் இருக்கும்” என்றார்.

இது தொடர்பாக ஐஐடி அதிகாரிகளிடம் பேசிய போது, ​​“விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது.” என்று முடித்துக்கொண்டனர்.



Source link