சென்னை: 2022 – 23 நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 7.3 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 11,52,021 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மின்சார பேருந்துகள், கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சார வாகன உற்பத்தியாளர் சங்கம் உறுதி செய்துள்ளது.
மின்சார இருசக்கர வாகனத்தை பொறுத்தவரையில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 60,000 வாகனங்கள் இந்தியாவில் கடந்த நிதியாண்டில் வாங்கப்பட்டதாக தகவல். மின்சார வாகனம் சார்ந்த விழிப்புணர்வு, மலிவான விலை மற்றும் அதற்கான அணுகல் தான் வாகன விற்பனை அதிகரித்துள்ளதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
மின்சார இருசக்கர வாகன விற்பனை இந்தியாவில் 2021-22 நிதியாண்டைக் காட்டிலும் கடந்த நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த 7.3 லட்ச மின்சார இருசக்கர வாகனத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு சுமார் 22 சதவீதம் என்றும் தகவல். இதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் வாகனத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப அம்சங்கள்தான் என சொல்லப்படுகிறது.
“மின்சார வாகனத்தின் எதிர்காலம் என்பது தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கும். அதை இரண்டு அல்லது மூன்று என வரையறுக்க முடியும். அதில் ஒன்று மென்பொருள். மற்றொன்று ஆற்றல் (என்ர்ஜி) / செல் சார்ந்து இருக்கும். இந்த இரண்டிலும் நாங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். அதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் விநியோகிக்கப்பட்ட சங்கிலி சார்ந்து ஒரு தளத்தைக் கட்டமைத்து வருகிறோம்” என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பவிஷ் அகர்வால் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வாகனச் சந்தை ஊக்கம் பெற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக ‘ஜென் Z மற்றும் மில்லினியல்’ தலைமுறையைச் சார்ந்தவர்களிடம் நேரடியாக இதன் பயன்பாடு சென்றடைந்துள்ளது. அதேபோல நவீன வாகன டிசைன், அரசின் திட்டம் போன்றவையும் காரணங்களாக உள்ளன.
வரும் 2030-க்குள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை சந்தையாக இந்தியா திகழ்கிறது. கடந்த நிதியாண்டில் சுமார் 16 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனத்திற்கான சந்தை வாய்ப்பு என்பது மிகவும் ஆரோக்கியமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.