புதுடெல்லி: மதுரையிலிருந்து சவுராஷ்டிரா சங்கமத்திற்குச் செல்லும் முதல் சிறப்பு ரயிலை மதுரையில் கொடியசைத்து தொடங்கி வைத்ததை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, “சவுராஷ்டிரா – தமிழ் சங்கம் நல்ல பிணைப்பை உருவாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில், மதுரையில் இருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது. சவுராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், இந்த நிகழ்வு பிணைப்பு குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சவுராஷ்டிரா சங்கமத்திற்கான பயணம் தொடங்கியுள்ள பண்டிகை சூழல் குறித்து பதிவிட்ட பிரதமர், “சவுராஷ்டிரா சங்கமத்தை நோக்கிய உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் குஜராத்தில் ஏப்.17 முதல் 26-ம் தேதி வரை ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஒரு ரயிலுக்கு 300 பேர் என மொத்தம் 10 ரயில்களில் 3,000 பேர் தமிழகத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மதுரையில் இருந்து முதல் சிறப்பு ரயில் ஏப்.14-ம் தேதி புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Source link