டாக்டர் விகடன்: என் வயது 50. பத்து வருடங்களுக்கு முன்பு, எனக்கு ஒரு விபத்து நடந்து பலத்த அடிபட்டது. டெஸ்ட் செய்தபோது பெரிய பாதிப்புகள் இல்லை என்றே அப்போது சொன்னார்கள். இப்போது ஒரு வருடமாகக் கடுமையான முதுகுவலியும் தலைவலியும் இருக்கிறது. முன்பு நடந்த விபத்தின் விளைவுதான் இது என்கிறார்கள் நண்பர்கள். அதுதான் காரணமாக இருக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

ஒருவருக்கு அடிபடுகிறது… ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து டெஸ்ட்டுகளையும் எடுக்கிறார்கள்… எல்லாம் நார்மல் என்று வரும் பட்சத்தில், அதற்கும், பத்து வருடங்கள் கழித்து வரும் தலைவலிக்கும் முதுகுவலிக்கும் பல வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்துக்கும் தொடர்பிருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்களுக்கு இப்போதுள்ள முதுகுவலிக்கும் தலைவலி என்ன காரணம் என்று மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதுவே ஒருவருக்கு விபத்து நடந்து நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டு, காயங்கள் பெரிதாக இருந்து, அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தால், ஒருவேளை பின்னாளில் அதன் தொடர்ச்சியாக ஏதேனும் பாதிப்புகள் வரக்கூடும். அடிபட்ட உடனே எந்தப் பாதிப்பும் இல்லாதபட்சத்தில், பிற்காலத்தில் எந்த பாதிப்பும் வராது.