இந்தச் சூழலில்தான் அவரின் பேட்டி வெளியாகியுள்ளது.
”நான் ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்தபோது ஒருநாள் காலை 7 மணிக்கு பா.ஜ.க தலைவரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகருமான ராம் மாதவ் என்னை சந்திக்க வந்தார். ஒரு நீர் மின்சாரத் திட்டத்துக்கு நான் உடனடியாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றார். மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை காஷ்மீரில் செயல்படுத்த அனுமதி கொடுக்கச் சொன்னார். இரண்டுக்கும் நான் ஒப்புதல் அளித்தால் எனக்கு 300 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் சிலர் பேரம் பேசினார்கள். தவறான எந்த விஷயத்துக்கும் நான் துணை போக மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன்” என்கிறார் சத்ய பால் மாலிக்.
”ஜம்மு காஷ்மீர் கவர்னராக நான் சில முறைகேடுகளைத் தடுத்தபோது மோடி என்னைப் பாராட்டினார்” என்று சொல்லும் சத்ய பால் மாலிக், ”அதேசமயம் ஊழலை ஒரு பெரிய விஷயமாக மோடி பொருட்படுத்துவதில்லை” என்றும் குண்டு வீசுகிறார்.

”இத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தாலும், ஜம்மு காஷ்மீரின் சூழல் குறித்து பிரதமர் மோடி இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அந்த மாநில அந்தஸ்தைப் பறித்தது தவறு. உடனடியாக மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு அந்தஸ்து தர வேண்டும்” என்கிறார் அவர், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முடிவைக் கடைசி நிமிடம் வரை கவர்னரான தனக்குச் சொல்லாமல் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.