கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் தனது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவிடம் அமைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள், பெற்றோர் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி, தன் பூர்வீக கிராமத்தில் தனது பெற்றோர் ரானோஜிராவ் – ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அப்போதே அடிக்கல் நாட்டினார். நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் அவரது ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், இவ்விடத்தில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை ரஜினியின் அண்ணன், நேரடியாக பராமரித்து வருகிறார். தற்போது, ​​இங்கு ரஜினியின் பெற்றோர் ரானோஜிராவ் – ராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கப்படுகிறது.

நாச்சிக்குப்பம் வருவார்: இவ்வாறு ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கூறும்போது, ​​கடந்த ஆண்டு (2022) டிச.8-ம் தேதி பெற்றோருக்கு நினைவேந்தல் கட்டி முடிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு பணிகள் வரும் ரஜினிக்கு வீடியோக்கள், படங்களை எடுத்து அனுப்பி வைக்கிறோம், தகவல்கள் பரிமாறிக் கொள்கிறோம். இங்கு வர வேண்டும் என்கிற ஆசை அவருக்கும் உள்ளது. ஆனால் தொடர்ந்து படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப் போகிறது. நிச்சயம் இங்கு ரஜினி ஒருநாள் வருவார். நான் இங்கு வந்து பணிகளை மேற்பார்வை செய்கிறேன் என்றார்.

பெரிய மனக்குறையே…: இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ​​ரஜினிகாந்த் எங்கள் ஊர்காரர் என்பது, பெருமையாக இருந்தாலும், இதுவரை அவர் ஒரு முறை கூட வரவில்லை என்பது பெரிய மனக்குறையாக உள்ளது. அரசியலுக்கு வந்திருந்தால், ஒருவேளை அவர் இங்கு வர வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டுள்ளதால், ரஜினி ஒருமுறையாவது வருவார் என நம்புகிறோம்.

Source link