கோவை: ஓபன் எண்ட் மில்களுக்கு நூற்பாலை நிர்வாகத்தினர் கழிவுப்பஞ்சு விற்பனை செய்யும்போது பேக்கிங் கட்டணம் விதிப்பது ஏற்புடையதல்ல என்று ‘ஓஇ’ தொழில் துறையினர் அறிவித்தனர்.

நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப்பஞ்சை ‘ஓபன் எண்ட்’ மில்களில் நூல் உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட மில்கள் செயல்படுகின்றன. இவற்றில் 300 மில்லி கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜீன்ஸ், திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப்பொருட்கள் ‘ஓஐ’ மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ‘ஓஇ’ மில்களில் முக்கிய மூலப்பொருளாக கழிவுப்பஞ்சு உள்ளது. ஒவ்வொரு முறையும் கழிவுப்பஞ்சு வாங்கும் நூற்பாலை நிர்வாகத்தினர் பேக்கிங் கட்டணம் வசூலிப்பதாகவும், இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமே பின்பற்றப்படும்போதும் ‘ஓஇ’ தொழில் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால்: கழிவுப் பஞ்சால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதில் ‘ஓஇ’ மில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருத்தி, செயற்கை இழை, விஸ்கோஸ் இழை உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

நூற்பாலைகள் நூலுக்குக்கூட பேக்கிங் கட்டணம் விதிப்பது இல்லை. ஆனால் ‘ஓஇ’ மில்கள் கழிவுப்பஞ்சு வாங்கும் போது ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை நூற்பாலை நிர்வாகத்தினர் பேக்கிங் கட்டணமாக வசூலிக்கின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் கழிவுப் பஞ்சு இறக்குமதி செய்யும் போது கூட இது போன்று பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் மட்டுமே இந்த நடைமுறை உள்ளது. இது ஏற்புடையதல்ல. ஜவுளி சங்கிலித்தொடரிலுள்ள ‘ஓஐ’ மில் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள நூற்பாலை நிர்வாகத்தினர் கழிவுப்பஞ்சுக்கு பேக்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், என்றார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி: தமிழகத்தில் ஒவ்வொரு நூற்பாலையிலும் ஒவ்வொரு விதமான பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை ஏற்புடையதல்ல. கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.63 ஆயிரம்க்குள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் கழிவுப் பஞ்சின் விலை கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் ரூ.145-ஆக அதிகரித்துள்ளது. சந்தையில் இரண்டாம் தர பருத்தி தற்போது ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதே நிலை நீடித்தால் ‘ஓஇ’ மில்கள் கழிவுப் பஞ்சுக்கு மாற்றாக இரண்டாம் தர பருத்தியை வாங்கி நூல் உற்பத்தி செய்யும் நிலை ஏற்படும். எனவே நூற்பாலை நிர்வாகத்தினர் கழிவுப்பஞ்சு விலையை ரூ.120-ஆக குறைக்க வேண்டும், என்றார்.

Source link